Dalits Education Karnataka Muslims RSS Saffronization Students

தலித் எழுத்தாளர்கள் நீக்கம், ஆர்எஸ்எஸ் தலைவர்கள் சேர்ப்பு; காவிமயமாக்கப்பட்டுள்ள கர்நாடக பாடப்புத்தக மாற்றங்களின் முழு பட்டியல்!

கர்நாடகா : மகாத்மா காந்தி, டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பற்றிய பாடங்கள் நீக்கப்பட்டு ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதிகளான விநாயக் சாவர்க்கர் மற்றும் கேபி ஹெட்கேவார் ஆகியோரின் பாடங்கள் பாடப்புத்தகங்களில் சேர்க்கப்பட்டுள்ளன.

அசர்ச்சைக்குரிய வலதுசாரி சொற்பொழிவாளர் ரோஹித் சக்ரதீர்த்தா தலைமையிலான குழுவால் உருவாக்கப்பட்ட பள்ளி பாடப்புத்தகங்களுக்கு எதிராக கர்நாடகாவில் உள்ள முற்போக்கு குழுக்கள் ஏன் போராடுகின்றன? இந்த நூல்களில் எந்தெந்தப் பிரிவுகள் திரிக்கப்பட்டிருக்கின்றன, எந்தெந்தப் பகுதிகள் காவி மையமாக்கப்பட்டுள்ளன, எந்த முற்போக்குக் கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன? சர்ச்சை தொடங்கியதில் இருந்து முதன்முறையாக, சக்ரதீர்த்த கமிட்டியின் பல்வேறு கமிஷனின் செயல்பாடுகள் குறித்தான முழுமையான பட்டியலை இப்போது காண்போம்..

கல்வியாளரும் எழுத்தாளருமான ஹர்ஷ குமார் குக்வே தொகுத்துள்ள பட்டியல், வகுப்புவாதம் மற்றும் சாதிய படிநிலைக்கு எதிராகவும், பாலின சமத்துவம் மற்றும் சமூக நீதிக்காகவும் பேசிய தலித் எழுத்தாளர்கள் மற்றும் முற்போக்கு, சீர்திருத்தவாத எழுத்தாளர்களின் பல பாடங்கள் கைவிடப்பட்டதைக் காட்டுகிறது. தீண்டாமை ஒழிப்பு, பாலின பாகுபாடு மற்றும் குழந்தை கடத்தல் போன்ற சமூக சீர்திருத்தங்கள் பற்றிய அத்தியாயங்கள் முற்றிலும் அகற்றப்பட்டுள்ளன.

மகாத்மா காந்தி, டாக்டர் பி.ஆர். அம்பேத்கர், ஜவஹர்லால் நேரு பற்றிய சில முக்கியமான பாடங்கள் நீக்குப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தவாதிகளான விநாயக் சாவர்க்கர் மற்றும் கே.பி. ஹெட்கேவார் பற்றிய பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

மொத்தம் 27 தலித் எழுத்தாளர்களின் படைப்புகள் கைவிடப்பட்டதாகவும், அவர்களுக்குப் பதிலாக 95% பாடங்கள் பிராமணர்களால் எழுதப்பட்டதாகவும் உள்ளதாக ஹர்ஷ குமார் ஆதாரங்களுடன் சுட்டி காட்டியுள்ளார்.

பாடப்புத்தகங்களின் இறுதி பதிப்பில் தக்கவைக்கப்பட்ட குறிப்பிடத்தக்க மாற்றங்களின் பட்டியல் இங்கே.

5 ஆம் வகுப்பு கன்னட பாடப்புத்தகம்: நன்கு அறியப்பட்ட கவிஞர் முட்னாகுடு சின்னசாமியின் ‘நன்ன கவிதை’ (எனது கவிதைகள்) கைவிடப்பட்டது. அவர் கர்நாடகாவில் பண்டாயா இலக்கிய இயக்கத்தின் முன்னோடியாக இருந்துள்ளார். மேலும் சாதி அமைப்புக்கு எதிராக பேசுவதற்கு தனது கவிதைகளைப் பயன்படுத்தினார். பண்டாயா இயக்கம் 1974 இல் தொடங்கப்பட்ட கன்னட இலக்கியத்தில் ஒரு முற்போக்கான இயக்கமாகும்.

5 ஆம் வகுப்பு கன்னட பாடப்புத்தகம்: எழுத்தாளர் போல்வர் மகமது குன்ஹியின் ‘சுல்லு ஹெலபரடு’ (பொய் சொல்லக்கூடாது) எந்த விளக்கமும் அளிக்கப்படாமல் நீக்கப்பட்டுள்ளது. முஸ்லீம் கலாச்சாரத்தை கன்னட புனைகதை உரைநடை எழுத்தில் கொண்டு வந்த முதல் எழுத்தாளர் குன்ஹி ஆவார். இஸ்லாம் பற்றிய தவறான கருத்துக்களையும் அவர் விரிவாக எழுதியிருந்தார்.

5 ஆம் வகுப்பு கன்னட பாடப்புத்தகம்: ‘ஹோசா தர்மகலா உதயா’ (புதிய மதங்களின் தோற்றம்) என்ற பாடமும் எந்த விளக்கமும் அளிக்கப்படாமல் நீக்கப்பட்டுள்ளது. மத நல்லிணக்கத்தைப் பற்றிய பயனுள்ள கண்ணோட்டம் பாடத்தில் இருந்ததாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

6ம் வகுப்பு கன்னட பாடப்புத்தகம்: டாக்டர் பி.ஆர். அம்பேத்கரைப் பற்றி எழுத்தாளரும் கவிஞருமான சென்னன்னா வாலிகர் எழுதிய ‘நீ ஹோடா மருதினா’ (நீ போன மறுநாள்) என்ற கவிதையும் விளக்கம் இல்லாமல் நீக்கப்பட்டுள்ளது. வாலிகர் மற்றொரு பண்டாயா இயக்கக் கவிஞர் ஆவார், அவர் விளிம்புநிலை சமூகங்களின் மேம்பாட்டிற்காக விரிவாக எழுதியவர்.

6ம் வகுப்பு கன்னட பாடப்புத்தகம் : எழுத்தாளர் மாலதி பட்டன்ஷெட்டியின் ‘கூடி நன்னா பலவ்யா’ (ஒட்டு மொத்தமாக என் வாழ்க்கை..) என்ற கவிதையும் எந்த விளக்கமும் அளிக்கப்படாமல் நீக்கப்பட்டுள்ளது.. பட்டன்ஷெட்டி, ர்நாடக சாகித்ய அகாடமியின் தலைவராகப் பணியாற்றி விருது பெற்ற எழுத்தாளர் ஆவார். அவர் சமூக அநீதிகளுக்கு எதிராக குரல் எழுப்ப தனது எழுத்தைப் பயன்படுத்தினார்.

6ஆம் வகுப்பு கன்னட பாடப்புத்தகம்: எழுத்தாளரும், கன்னட சாகித்ய பரிஷத்தின் (KSP) முன்னாள் தலைவருமான மனு பாலிகர் எழுதிய ‘பா பேகா சூர்யா’ (சூரியனே விரைவில் வா) என்ற கவிதை நீக்கப்பட்டுள்ளது. வங்கிப் பணியாளர் தேர்வாணையம் (IBPS) நுழைவுத் தேர்வுகளை கன்னடத்தில் நடத்தாததற்கு பாலிகர் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததோடு, கன்னடத்தில் தேர்வுகளை நடத்துமாறு ஒன்றிய அரசை வலியுறுத்துமாறு அப்போதைய முதல்வர் எடியூரப்பாவுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

வகுப்பு 6 கன்னட பாடப்புத்தகம்: சிவபிரகாஷ் எழுதிய ‘மகு மாத்து ஹன்னுகலு’ (குழந்தை மற்றும் பழங்கள்) என்ற கட்டுரை நீக்கப்பட்டுள்ளது. சிவபிரகாஷ் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் எழுத்தாளர் மற்றும் பேராசிரியராக உள்ளார்.

7 ஆம் வகுப்பு கன்னட பாடப்புத்தகம்: சாவித்ரிபாய் பூலே பற்றிய டாக்டர் எச்.எஸ்.அனுபமாவின் கட்டுரை நீக்கப்பட்டுள்ளது. அதன் இடத்தில், ஆர்எஸ்எஸ் நடத்தும் கன்னட வார இதழான விக்ரமாவுடன் தொடர்புடைய எழுத்தாளர் ராமநாத ஆச்சார்யா எழுதிய ‘சமூகப் பொறுப்பின் முதல் பாடம்’ என்ற பாடம் சேர்க்கப்பட்டுள்ளது.

7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : சாவித்ரிபாய் பூலே, தாராபாய் ஷிண்டே, பண்டிட் ரமாபாய் ஆகியோரைக் கொண்ட பெண் சமூக சீர்திருத்தவாதிகள் பற்றிய பாடம் கைவிடப்பட்டுள்ளது.

7 ஆம் வகுப்பு சமூக அறிவியல்: மகாத்மா காந்தியின் சுதந்திர இயக்கம், சம்பாரண் மற்றும் விவசாயிகளின் போராட்டத்தின் ஆரம்ப நாட்களைப் பற்றிப் பேசம் ‘காந்தி யுகா’ (காந்தியின் சகாப்தம்) என்ற பாடமும் கைவிடப்பட்டுள்ளது.

7 ஆம் வகுப்பு சமூக அறிவியல்: அம்பேத்கரின் ஆரம்ப காலம், அவரது சொந்த ஊர், அவரது பெற்றோர், மஹத் சத்தியாகிரகம், அவர் தலைமை தாங்கிய காலாராம் கோவிலில் தலித் நுழைவு போன்ற அனைத்து விவரங்களும் அடங்கிய ‘அம்பேத்கர் மத்து அவர சுதாரனேகள்’ (அம்பேத்கர் மற்றும் அவரது சீர்திருத்தங்கள்) என்ற பாடம். நீக்கப்பட்டுள்ளது.

7 ஆம் வகுப்பு சமூக அறிவியல்: ராணி அப்பாக்கா தேவி, பல்லாரி சித்தம்மா, கமலாதேவி சட்டோபாத்யாய், யசோதரா தாசப்பா, உமாபாய் குண்டாப்பூர் ஆகியோர் இடம்பெற்றுள்ள ‘மஹிளா சுதந்திர போராட்ட வீராங்கனைகள்’ என்ற பாடம் முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளது.

வகுப்பு 8 கன்னடம்: விஜயமாலா ரங்கநாத்தின் ‘ரத்தக் வகை ‘ என்ற அத்தியாயம், சமூக சமத்துவம் பற்றிய பாடம், சாவர்க்கர் பற்றிய ‘காலவண்ணு கெத்தாரு’ (பருவத்தை வெல்பவர்) எனும் கே.டி.காட்டியின் ஆக்கம் கொண்டு மாற்றப்பட்டுள்ளது.

8 ஆம் வகுப்பு கன்னடம்: ‘மகலிகே பரேதா பத்ரகலு’ (ஒரு தந்தை தனது மகளுக்கு எழுதிய கடிதங்கள்), ஜவஹர்லால் நேரு, தி தா ஷர்மாவால் மொழிபெயர்க்கப்பட்டது, சித்தனஹள்ளி கிருஷ்ண ஷர்மாவுக்குப் பதிலாக பரம்பள்ளி நரசிம்ம ஐத்தாலின் புராண நாடகமான பூகைலாசா இடம் பெற்றுள்ளது.

வகுப்பு 8 சமூக அறிவியல்: புவியியல் அம்சங்கள், பண்டைய உலக நாகரீகங்கள், பண்டைய இந்திய நாகரிகங்கள், சமண மற்றும் பௌத்தத்தின் எழுச்சி என்ற தலைப்பிலான பாடங்கள் இந்தியா, சிந்து சரஸ்வதி நாகரிகம், சனாதன தர்மம், ஜைன மற்றும் பௌத்த மத போதனைகள் போன்றவற்றை கொண்டு மாற்றப்பட்டுள்ளது.

வகுப்பு 8 சமூக அறிவியல்: வாய்வழி மேற்கோள்கள்: குமாரராய, சித்ரதுர்காவின் நாயக்கர்கள், கெம்பே கவுடா, திப்பு சுல்தான், சங்கொல்லி ராயண்ணா, கிட்டூர் சென்னம்மா, சிந்தூர் லக்ஷ்மணா, மெடோஸ் டெய்லர் ஆகியோரின் எடுத்துக்காட்டுடனான விளக்கங்கள் , தற்போது வேதங்கள் மற்றும் மகாபாரதத்தின் எடுத்துக்காட்டுகளால் மாற்றப்பட்டுள்ளன.

8 ஆம் வகுப்பு சமூக அறிவியல்: இந்தியாவின் (அரசியல் பிரிவுகளின்-political divisions) வரைபடம் ஆர்எஸ்எஸ் கற்பனையான ‘அகண்ட பாரதத்தின்‘ வரைபடத்தால் மாற்றப்பட்டுள்ளது.

வகுப்பு 8 சமூக அறிவியல்: மனித உரிமைகள் பற்றிய அத்தியாயம் நீக்கப்பட்டுள்ளது.

வகுப்பு 8 சமூக அறிவியல்: அசோகரின் பேரரசு பற்றிய தகவல்கள் மூன்று பக்கங்கள் இருந்தன. இது குறைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பௌத்தம் மற்றும் அசோகர் பற்றிய பிரிவுகளும், அசோகரின் கல்வெட்டுகளும் அகற்றப்பட்டுள்ளன.

9 ஆம் வகுப்பு கன்னடம்: தலித் எழுத்தாளர் அரவிந்த் மலகாட்டியின் புத்தர் பற்றிய கவிதை, ‘மராலி மனேகே’ நீக்கப்பட்டுள்ளது.

வகுப்பு 9 சமூக அறிவியல்: கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் பற்றிய ஒரு பாடம் இருந்தது. அதற்கு பதிலாக தற்போது சமகால மதங்கள் என்ற தலைப்பில் ஒரு பாடம் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் மதமும், தர்மமும் (religion and dharma) வெவ்வேறு என ஒரு குழப்பமான புரிதலை முன்வைக்கிறது.

வகுப்பு 9 சமூக அறிவியல்: ‘நம்ம சம்விதானா’ (நமது அரசியலமைப்பு) அத்தியாயத்தில், அம்பேத்கர் அரசியலமைப்பின் சிற்பி என்று அவரது பங்களிப்பைச் சிறப்பித்துக் காட்டும் ஒரு வரி இருந்தது. இது அகற்றப்பட்டு, அதற்குப் பதிலாக, அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவதில் பிஎன் ராவுக்கு முக்கியப் பங்கு உள்ளது என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

10 ஆம் வகுப்பு, கன்னடம்: சாரா அபூபக்கரின் உரைநடை ‘யுத்தா’ (யுத்தம்) கைவிடப்பட்டுள்ளது. சாரா அபூபக்கர் ஒரு முக்கிய முஸ்லிம் கன்னட எழுத்தாளர்.

10ஆம் வகுப்பு, கன்னடம்: சுவாமி விவேகானந்தரின் போதனைகள் நீக்கப்பட்டுள்ளன. தத்துவஞானியும் சமஸ்கிருத அறிஞருமான பன்னஞ்சே கோவிந்தாச்சார்யாவின் ஆக்கங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

10 ஆம் வகுப்பு, கன்னடம்: ஆர்எஸ்எஸ் நிறுவனர் கேபி ஹெட்கேவாரின் ‘நிஜவாத ஆதர்ஷ புருஷா யாராகபேகு’ (யார் சிறந்த முன்மாதிரி?) பேச்சு சேர்க்கப்பட்டுள்ளது.

10 ஆம் வகுப்பு, கன்னடம்: பி லங்கேஷின் ‘ம்ருகா’ (மிருகம்) மற்றும் ‘சுந்தரி’ (அழகி) ஆகிய கதைகள் நீக்கப்பட்டுள்ளன. பி லங்கேஷ் ஒரு நன்கு அறியப்பட்ட பத்திரிகையாளர், முற்போக்கான எழுத்தாளர். இவர் இந்துத்துவா கும்பலால் படுகொலை செய்யப்பட்ட பத்திரிக்கையாளரான ஆர்வலர் கவுரி லங்கேஷின் தந்தை ஆவார்.

10 ஆம் வகுப்பு, கன்னடம்: ‘ஜனபத ஒகடுகலு’ (நாட்டுப்புற புதிர்கள்) பாடம் நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக ‘ஹெங் புங்கிலி’ புகழ் எழுத்தாளர் சக்ரவர்த்தி சுலிபெலேவின் ‘இந்தியாவின் நித்திய குழந்தைகள்’ (‘பாரதிய அமரபுத்ரரு’) பாடம் இடம் பெற்றுள்ளது. சுலிபெலே ஒரு பிரபலமான வலதுசாரி சித்தாந்தவாதியும் பேச்சாளருமாவார்..

10 ஆம் வகுப்பு சமூக அறிவியல்: காந்தி காலத்தில் சுதந்திரப் போராட்டம் குறித்த பாடம் நீக்கப்பட்டுள்ளது. முன்னதாக, அம்பேத்கர் பற்றிய பகுதியில், “சாதி அமைப்பால் சலிப்படைந்து, இந்து மதத்தை விட்டு வெளியேறி, சாதி அமைப்பையும் சமூக அடுக்குமுறையையும் எதிர்த்து பௌத்தத்தை ஏற்றுக்கொண்டார்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்குப் பதிலாக, “சிறு வயதிலிருந்தே, இந்து மதத்தின் மீது சலிப்படைந்து, இந்துக் கலாச்சாரத்தின் ஒரு அங்கமான பௌத்தத்தை ஏற்றுக்கொண்டார்” என்று இப்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

10 ஆம் வகுப்பு சமூக அறிவியல்: இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை குறித்த பாடம் முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது.

10 ஆம் வகுப்பு சமூக அறிவியல்: நாராயண குருவின் தர்ம பரிபாலன யோகம், தியோசாபிகல் சொசைட்டி, யங் பெங்கால் இயக்கம் மற்றும் பெரியார் பற்றிய சமூக மற்றும் மதச் சீர்திருத்தப் பாடங்கள் முற்றிலுமாக = நீக்கப்பட்டுள்ளன.

10 ஆம் வகுப்பு சமூக அறிவியல்: சமூக இயக்கங்கள் குறித்த பாடம் முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது.

10 ஆம் வகுப்பு சமூக அறிவியல்: ‘சமூகத்தில் உள்ள பிரச்சனைகள்’ (சமாஜக சமஸ்யேகலு) பாடம் ‘சமூக கேள்விகள்’ (சமாஜிக சவலுகள்) என மாற்றப்பட்டு, ‘பிராந்தியவாதம்’ பற்றிய புதிய கூறு சேர்க்கப்பட்டுள்ளது. மொழிப்போராட்டம் நாட்டின் நலனுக்கு எதிரானது என்கிறது. தெலுங்கானாவை அதற்கு உதாரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

10 ஆம் வகுப்பு சமூக அறிவியல்: தீண்டாமையை ஒழிப்பதற்கான இயக்கங்கள் குறித்த பாடம் முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளது.

10ஆம் வகுப்பு சமூக அறிவியல்: பாலினப் பாகுபாடு, குழந்தைத் திருமணம், குழந்தை கடத்தல் குறித்த பாடம் முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது.

நன்றி: தி நியுஸ் மினிட்