Alleged Police Brutalities Dalits Uttar Pradesh

உ.பி: போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்ட தலித் நபர்.. உடலும் வலுக்கட்டாயமாக எரிப்பு!

உத்தரபிரதேசத்தின் ஃபரூகாபாத் பகுதியைச் சேர்ந்த 35 வயதான தலித் கௌதம், ஜூன் 24 அன்று இரவு அவரது வீட்டில் நடைபெற்ற சோதனையைத் தொடர்ந்து காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டதாக அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

ஃபரூகாபாத் மாவட்டம் மேராபூர் காவல் நிலைய எல்லைக்குள் இந்த சம்பவம் நடந்துள்ளது. சட்டவிரோதமாக மது விற்பவர்களை பிடிக்கவே போலீசார் கவுதமின் வீட்டை சோதனையிட சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.

பெரும் போராட்டத்திற்கு பிறகே எஃப்ஐஆர் :

ஆரம்பத்தில் கௌதமின் உடலை பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்ல அவரது குடும்பத்தினர், போலீசாரை அனுமதிக்கவில்லை. குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்களின் பெரும் போராட்டத்தை அடுத்து 10 போலீசார் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. .

இறந்த 35 வயதான கௌதமின் குடும்பத்தினரின் புகாரின் பேரில், மேராபூர் காவல் நிலைய அதிகாரி ஜெகதீஷ் வர்மா, சப்-இன்ஸ்பெக்டர் விஸ்வஜீத் ஆர்யா, கான்ஸ்டபிள்கள் சச்சின், நிகில் மற்றும் பெயர் குறிப்பிடப்படாத 6 போலீஸார் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.

வீட்டிற்குள் புகுந்த போலீசார்:

ஜூன் 24 அன்று, போலீசார் அதிகாலை 1 மணியளவில் கெளதமை அவரது வீட்டிலிருந்து அழைத்துச் சென்று அருகிலுள்ள வயலில் அடித்துக் கொன்றனர் என்று இறந்தவரின் குடும்ப உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மற்ற கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு சென்றதும் போலீசார் ஓடிவிட்டனர் என்று புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊருக்கு ஒதுக்குப்புறமான ஒரு கோயிலுக்கு எதிரே உள்ள வயல்வெளியில் என் கணவரை அழைத்துச் சென்ற போலீசார், அவரை அடித்துக் கொன்றார்கள். என் கணவரை விட்டுவிடும்படி நான் மூன்று போலீஸ்காரர்களிடம் கெஞ்சினேன், ஆனால் அவர் இறக்கும் வரை அவர்கள் அவரை விடவில்லை. அவர் தலித் என்ற காரணத்திற்காக கொல்லப்பட்டார், ”என்று அவரது மனைவி புகாரில் தெரிவித்துள்ளார்.

கௌதம் மீது முன் எந்த ஒரு புகார் அல்லது குற்றச்சாட்டு இதுவரை பதியப்பட்டது இல்லை என்று கௌதமின் சகோதரர் உடல்(udal) தெரிவித்தார். கௌதம் வீட்டு முற்றத்தில் தூங்கிக் கொண்டிருந்தபோது, போலீஸார் வீட்டுக்குள் புகுந்தனர். சத்தம் கேட்டு கண்விழித்த கௌதம், போலீசாரை தடுக்க முயன்றபோது, போலீசார் அவரை இழுத்து சென்றனர் என்கிறார் உடல்.

நான் அவர்களைப் பின்தொடர்ந்தேன், ஆனால் போலீசார் என்னை என் சகோதரனை நெருங்க அனுமதிக்கவில்லை.போலீசார் தொடர்ந்து அவரை அடித்ததால் அவரது அலறல் சத்தம் எனக்கு கேட்டது,” என்றார் உடல்.

வலுக்கட்டாயமாக உடல் எரிப்பு, கிராம மக்கள் போராட்டம் :

கெளதமின் உடலைக் கண்டதும், குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர், மேலும் காவல்துறையினர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யுமாறு கோரினர். அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்க குடும்பத்தினர் மறுத்துவிட்டனர். உள்ளூர் செய்தியாளர்களிடம் பேசிய குடும்பத்தினர், ஜூன் 25 அன்று உள்ளூர் போலீசாரின் உத்தரவின் பேரில் கௌதமின் உடல் வலுக்கட்டாயமாக எரிக்கப்பட்டதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

நன்ஹி, சந்தோஷ், சத்யவீர் மற்றும் மீனா ஆகிய நான்கு பேர்களின் வீடுகளையும் போலீசார் சேதப்படுத்தியதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

“யோகி போலீசார் மதுவை பிடிப்பதற்காக சென்று ஒரு சடலத்தை விட்டுச் சென்றுள்ளனர். ஃபரூகாபாத்தின் சன்கிசாவில், மதுபானங்களை பறிமுதல் செய்யச் சென்ற போலீஸார், (சேனா பஹேலியா என்ற) கவுதம் என்பவரை அடித்துக் கொன்றனர். தலித்துகள் மீதான அடக்குமுறையை தடுக்க முடியாத யோகி-போலீசார் இப்போது ரெய்டு என்ற பெயரில் கொலை செய்கிறார்கள். காவல்துறைக்கு யார் இந்த அதிகாரத்தை கொடுத்தது?

என தலித் தலைவர் சந்திரசேகர் ஆசாத் இந்த சம்பவம் குறித்து ட்வீட் செய்துள்ளார்.