BJP Karnataka Modi

கர்நாடகா: பிரதமர் மோடியின் ஒரு நாள் பயணத்திற்காக ரூ. 23 கோடி செலவு !

கர்நாடகா: பெங்களூருவில் வசிப்பவர்கள் நகரின் சாலைகளின் நிலை குறித்து தொடர்ந்து புகார் தெரிவித்து வரும் நிலையில், பிபிஎம்பி (ப்ருஹத் பெங்களூரு மகாநகர பலிகே) பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு முன்னதாக, சுமார் 14 கிமீ சாலையை மறுசீரமைக்கவும், பழுதுபார்க்கவும் ரூ.23 கோடி செலவிட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. பிரதமர் ஜூன் 20, திங்கட்கிழமை பெங்களூர் சென்றார், அப்போது அவர் பல வளர்ச்சி மற்றும் ரயில்வே திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.

செய்தியாளர் கூட்டத்தில் பேசிய பி.பி.எம்.பி சிறப்பு ஆணையர் (திட்டங்கள்) பி.என்.ரவீந்திரா, பிரதமரின் வருகைக்கு 15 நாட்களுக்கு முன்னதாக அவர் பயணிக்கும் சாலைகளில் குடிமை அமைப்பு பணிகளைத் தொடங்கியதாக தெரிவித்தார். இப்பணிக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டு, இரவும் பகலும் வேலை நடைபெற்றதாக அவர் தெரிவித்தார். பிரதமர் பயணித்த பல்லாரி சாலை, துமகுரு சாலை, மைசூர் சாலை, பெங்களூரு பல்கலைக்கழக சாலை, கோமகட்டா சாலை மற்றும் பிற சாலைகள் சீரமைக்கப்பட்டன.

சாலைகளை நிலக்கீல் அமைப்பது மட்டுமின்றி, சர்வீஸ் ரோடுகளை சீரமைத்தல், தெரு விளக்குகள் பொருத்துதல், வர்ணம் பூசுதல் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்பட்டன என ரவீந்திரன் மேலும் கூறினார்.

பிபிஎம்பி தலைமை ஆணையரின் விருப்ப நிதியில் இருந்து இந்த சாலைகளின் மறுசீரமைப்புக்காக நிதி பயன்படுத்தப்பட்டது. பிபிஎம்பி தவிர, பெங்களூர் மேம்பாட்டு ஆணையமும் (BDA) கோமகட்டா அருகே 5.5 கிமீ சாலையின் மறுவடிவமைப்புப் பணிகளை மேற்கொண்டது. நகரில் உள்ள மற்ற சாலைகள் ஏன் சீரமைக்கப்படவில்லை என்று கேள்வி எழுப்பியபோது, ​​நகரத்தில் 1,600 சாலை பள்ளங்கள் மட்டுமே உள்ளன என்று ரவீந்திரன் கூறினார்.

பிரதமர் மோடி தனது பயணத்தின் போது, ​​பெங்களூருவின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களை 40 நாட்களுக்குள் மேற்கொள்ளுமாறு பாஜக தலைமையிலான மாநில அரசுக்கு உத்தரவிட்டதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. திங்களன்று, பெங்களூரு புறநகர் ரயில் திட்டம், புதிய சர் எம் விஸ்வேஸ்வரயா ரயில் முனையம் உட்பட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு வழக்கம் போல் அடிக்கல் நாட்டினார்.

40 ஆண்டுகளாக பெங்களூருவின் வளர்ச்சியை காங்கிரஸ் அரசு புறக்கணித்ததாக குற்றம் சாட்டிய அவர், 40 ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்ற மேம்பாட்டுத் திட்டங்களை மேற்கொண்டிருந்தால் நகரத்தின் உள்கட்டமைப்பு வலுவாக இருந்திருக்கும் என்றும் ரவீந்திரன் கூறினார்.