Hindutva Islamophobia Karnataka Lynchings Minority Muslims

கர்நாடகா: புர்காவை கழற்ற சொல்லி கொடூர தாக்குதலில் ஈடுபட்ட மதவெறி கும்பல்!

சனிக்கிழமையன்று பாஜக ஆளும் கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் மதவெறி கும்பல் ஒன்று ஆறு முஸ்லிம் ஆண்கள் மீது கொடூரமான தாக்குதலில் ஈடுபட்டனர்.

அருகில் உள்ள ஒரு தர்காவிற்கு சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்த ஒரு முஸ்லீம் குடும்பத்தின் காரை ஒரு மதவெறி கும்பல் தடுத்து நிறுத்தி, வாகனத்தின் உள் இருந்த பெண்களிடம் “புர்காவைக் கழற்றுமாறு” கூறியதை அடுத்து இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது, இதில் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்புக்கு வழிவகுத்தது.

தாக்குதலில் ஈடுபட்டவர்கள் எஃப்ஐஆர்:

தாக்குதல் நடத்தியவர்கள் மீது இரண்டு எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டு இதுவரை மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையில், காயமடைந்தவர்கள் தங்களைத் தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.

தீர்ஹள்ளியில் உள்ள தர்காவிற்கு சென்று விட்டு (ஹஸ்ரத் உஸ்மான் ஷா வலி) எனது குடும்பத்தினருடன் காரில் திரும்பிக் கொண்டிருந்தேன். அப்போது திடீரென இந்து இளைஞர்களின் கும்பல் ஒன்று எங்கள் காரை நிறுத்தி பிரச்சனையை ஏற்படுத்தினர். அவர்கள் சத்தமிட்டு கொண்டே, எங்கள் பெண்களை அவர்களின் புர்காவை கழற்றச் சொன்னார்கள். இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. நாங்கள் உடனடியாக காவல்துறையை அழைத்தோம்”என்று பாதிக்கப்பட்ட சுபைர் கூறினார்.

மலை உச்சி தர்கா:

“முஸ்லீம்கள் இங்கு வர அனுமதிக்கப்படக் கூடாது என்று அவர்கள் கூறினர், தாக்குதலில் ஈடுபட்டவர்கள், மலையின் உச்சியில் உள்ள தர்காவுக்குச் செல்லும் வழியில் உள்ள உள்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். முஸ்லிம்கள் இந்த கிராமத்தின் வழியாக பயணம் செய்யும் போது கடந்து செல்ல நேரிடுகிறது.”

தொடர்ந்து கூறிய சுபைர் “போலீசார் இந்த விஷயத்தை விசாரிக்க வரும் முன்னரே. தாக்கியவர்கள் கிராமத்திற்குள் ஓடிவிட்டனர், எனது குடும்ப உறுப்பினர்கள் சிலர் அந்தக் கும்பலைத் தேடி கிராமத்திற்குள் சென்றனர். அப்போது ராடு மற்றும் கம்புகளால் கொடூரமாக தாக்கப்பட்டு, தற்போது எஸ்என்ஆர் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்,” என்றார்.

போலீசார் முன்னிலையில்:

எனது தலையில் ஆழமான காயம் ஏற்பட்டுள்ளது, கிட்டத்தட்ட சுயநினைவை இழந்தேன். அவர்கள் எங்களை தாக்கியதாக போலீசாரிடம் கூறினோம். அந்தக் கும்பல் எங்களைத் தொடர்ந்து தாக்கியது மட்டுமின்றி , காவல்துறையின் முன்னிலையில் எங்களைத் மிரட்டி துஷ்பிரயோகம் செய்தனர்

என்று காயமடைந்தவர்களில் ஒருவரான ஃபிர்தௌஸ் பாஷா கூறினார்.

தஜம்முல் ஷெரீப், மாஸ் பேக், பெரோஸ் பாஷா, சயீத் பாஷா மற்றும் ஷேக் அன்வர் ஆகியோரும் பலத்த காயமடைந்தனர்.