Indian Judiciary Uttar Pradesh

உபி: நீதிமன்றத்திற்குள் நுழைந்து நீதிபதியை எட்டி மிதித்து, அறைந்த கொடூரம் !

உன்னாவ் பார் அசோசியேஷன் உறுப்பினர்களால் கடந்த வியாழக்கிழமை தாக்கப்பட்டதாக உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த நீதிபதி ஒருவர் கூறியதையடுத்து எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் தலைமை தாங்கி கொண்டிருந்த நீதிமன்ற அறைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தபட்டுள்ளது. நாட்டையே உலுக்கி இருக்க வேண்டிய இந்த சம்பவம் முற்றிலுமாக மூடி மறைக்கப்பட்ட நிலையில் உள்ளது.

நீதிபதிக்கே இந்த நிலை:

கடந்த மார்ச் 25 அன்று, உன்னாவோவில் உள்ள கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி (சிறப்பு நீதிமன்றம், போக்ஸோ சட்டம்), பிரஹ்லாத் டோண்டன் உன்னாவ் (கோட்வாலி காவல் நிலையம்) எஸ்.எச்.ஓவுக்கு ஒரு கடிதம் எழுதினார். அக்கடிதத்தில் அவர் உன்னாவ் பார் அசோசியேஷன் உறுப்பினர்களால் தனது நீதிமன்ற அறைக்குள் வைத்து துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகவும். ஒரு கட்டத்தில் உதைக்கப்பட்டு, அறையவும் பட்டதாக நீதிபதி கூறியுள்ளார்.

“நான் என் அறைக்குச் செல்ல முயன்றேன், இந்த மக்கள் என்னைச் சூழ்ந்து கொண்டு என்னை உதைத்து, அறைந்து, கீழே தள்ளி என் மொபைலைப் பறித்துக்கொண்டனர்” என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

வழக்கு பதிவு: கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வக்கீல்களுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடந்த சம்பவம்:

நீதிபதியின் கடிதத்தின்படி, மார்ச் 25 அன்று காலை 11 மணியளவில் பார் அசோசியேஷனின் பொதுச் செயலாளர் உட்பட 150-200 வக்கீல்கள் அடங்கிய கும்பல் நீதிமன்ற அறை எண் 11 க்குள் நுழைந்தது, உள்ளே நீதிபதி அமர்ந்திருந்த நிலையில் கோஷங்களை எழுப்பத் தொடங்கினார்.நீதிமன்ற அறையில் இருந்த நாற்காலி மற்றும் மேசையை தூக்கி வீச ஆரம்பித்தனர்.

பின்னர் வக்கீல்களின் கும்பலால் தான் தாக்கப்பட்டு, முகத்தில் அறையப்பட்டதாகவும், பிறகு நீதிமன்ற ஊழியர்களால் மீட்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

“உடனே, நான் நீதிமன்ற அறையிலிருந்து பக்கத்து கேலரிக்கு ஓடினேன், அவர்கள் என் ஸ்டெனோ அறைக்குள் நுழைந்தனர், மேலும் ஜன்னலின் கண்ணாடிகளையும் உடைத்தனர்”, என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இதைக் கருத்தில் கொண்டு, கூறப்படும் சம்பவம் குறித்து உடனடி விசாரணையைத் தொடங்குமாறு நீதிபதி காவல்துறையிடம் கோரியிருந்தார். அதன்படி, காவல் துறையினர் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தனர்.