Activists Arrests Indian Judiciary NIA Political Vendetta

தேசிய பாதுகாப்பு சட்டம், யுஏபிஏ ஆகிய சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டோரின் மலைக்க வைக்கும் விவரங்கள்..

த்திய உள்துறை துணை அமைச்சர் கிஷன் ரெட்டி மாநிலங்கள் அவையில் அளித்த விவரங்களின்படி, 2016, 17, 18 மூன்றாண்டுகளில் இச்சட்டத்தின் கீழ் தொடுக்கப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 3005; கைது செய்யப்பட்டோர் எண்ணிக்கை 3974; விவரம் : 2016, 2017, 2018 ஆண்டுகளில் UAPA சட்டத்தில் தொடுக்கப்பட்ட வழக்குகள் முறையே 922, 901, 1182. ஒவ்வொரு ஆண்டும் கைது செய்யப்பட்டோர் எண்ணிக்கை: 999, 1,554 , 1,421 ஆகும். இந்த மூன்று ஆண்டுகளிலும் தலா 232, 272 ,317 வழக்குகளில் மட்டுமே குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது

மொத்தத்தில் இந்த மூன்றாண்டுகளிலும் 821 வழக்குகளில்தான் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதாவது வெறும் 27% வழக்குகளில் மட்டும்தான் குறிப்பிடத் தக்கது. அது மட்டுமல்ல. 2017 இல் 127 வழக்குகளில் விசாரணை நிலுவையில் (investigation pending) இருந்தன. 2018 இல் 62 வழக்குகள் இப்படி நிலுவையில் இருந்தன. விசாரணை முடியவில்லை என்பதன் பொருள் இந்த வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்கள் பிணையில் வெளிவர இயலாது.

தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் (NSA) கைது செய்யப்பட்டோர் விவரம்:

2017 இல் 561 பேர் கைது. 229 பேர்களுக்கு மட்டும் பிணையில் விடுதலை. 2018ல் இச்சட்டத்தில் கைது செய்யப்பட்டோர் 697. இதில் 406 பேர்களுக்கு மட்டும் பிணையில் விடுதலை கிடைத்தது.
மொத்தத்தில் 1198 பேர்கள் கைது செய்யப்பட்டு அதில் 563 பேர் இன்னும் சிறையில் உள்ளனர். இஸ்லாமிக் ஸ்டேட் (IS) தொடர்பு எனக் கைது செய்யப்பட்டோர்.தெலங்கானா, கேரளம், ஆந்திரம், கர்நாடகம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் கைது செய்யப்பட்டோர் எண்ணிக்கை 122.

இவை அனைத்தும் செப் 16, 2020 இல் மாநிலங்கள் அவையில் அமைச்சரால் அறிவிக்கப்பட்ட விவரங்கள்.

பாலன், சீனிவாசன், அனுப்பூர் செல்வராஜ் ஆகியோர் இப்போது (பிப் 2021) கைது செய்யப்பட்டபோது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தரப்பில் வெளியிடப்பட்ட கண்டன அறிக்கையில் அதன் தலைவர் அழகிரி கூறியுள்ளபடி 2019 இல் தமிழ்நாட்டில் மட்டும் UAPA சட்டத்தில் 270 வழக்குகள் பதியப்பட்டுள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 2014 காலகட்டத்தில் 4878 வழக்குகள் UAPA சட்டத்தில் போடப்பட்டுள்ளது என்பதும் அவ் அறிக்கையில் பதியப்பட்டுள்ளது.

தண்டிக்கப்படும் வீதம் மிகக் குறைவு:

UAPA சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்கள் தண்டிக்கப்படும் வீதம் மிகக் குறைவு.நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் தேசிய அளவிலான குற்றப் பதிவு ஆவணத்தில் (National Crime Records Bureau) ) உள்ள தகவல்களின் அடிப்படையில் மேற்கொண்ட ஆய்வில் இவ்வாறு UAPA சட்டத்தில் கைது செய்யப்படுபவர்களில் 50 சதத்திற்கும் மேற்பட்டோர் குற்றமற்றவர்கள் என விடுதலை செய்யப்படுவது வெளிப்பட்டுள்ளது (Sana Shakil, 50 percent Unlawful Activities Prevention Act cases fell flat in 2014-18, NIE, 20, Sep 2020). 2014 முதல் 2018 வரையிலான 5 ஆண்டு கைதுகள் இந்த ஆய்வில் பயன்படுத்தப்பட்டுள்ளன. 2015 இல் வெறும் 14.5 % பேர்கள் மீதான குற்றச்சாட்டு மட்டுமே நிரூபிக்கப்பட்டது. மீதமுள்ள 85.5 % பேர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் நிறுவப்படவில்லை.

அதிகபட்சமாக்க் குற்றம் நிறுவப்பட்டு தண்டிக்கப்பட்ட்து 2017 இல் மட்டும்தான். அந்த ஆண்டு 49.3% பேர்கள் தண்டிக்கப்பட்டனர். மற்ற ஆண்டுகளில் 50 % க்கும் மேற்பட்டவர்களின் குற்றங்கள் நிறுவப்படவில்லை. 2018 இல் தண்டிக்கப்பட்டவர்களின் வீதம் 27.2% மட்டுமே. பல ஆண்டுகள் சிறைகளில் அடைக்கப்பட்டு, பிணை விடுதலை முதலான உரிமைகள் மறுக்கப்பட்டு இறுதியில் குற்றம் நிரூபிக்கப்படாமல் தான் முக்கால்வாசிப் பேர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

உ.பியில் யோகி ஆதித்யநாத் பதவி ஏற்றபின் UAPA சட்டத்தில் கைது செய்யப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அங்கு 2016 இல் வெறும் 10 பேர்கள்தான் இச்சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் 2011 இல் ஆதித்யநாத் பதவி ஏற்றார். அந்த ஆண்டு அங்கு 109 பேர்கள் UAPA வில் கைது செய்யப்பட்டனர். 2018 இல் 107 பேர் கைது செய்யப்பட்டனர். அதே போல ஜம்மு காஷ்மீரில் 2014 இல் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 45. 2018 இல் அது 245 ஆக அதிகரித்தது.

மணிப்பூர், கோவா, குஜராத், ஹரியானா, இமாசலப் பிரதேசம், மிசோராம், ஒடிசா, ராஜஸ்தான், சிக்கிம், தெலங்கானா, திரிபுரா, மே,வங்கம் ஆகிய மாநிலங்களில் 2018 இல் ஒரு வழக்கு கூட UAPA சட்டத்தில் பதிவு செய்யப்படவில்லை.

90 நாட்களில் தாக்கல் செய்யப்படுகிறதா?:

UAPA சட்டத்தில் குற்றப்பத்திரிகை 90 நாட்களில் தாக்கல் செய்ய வேண்டும் என்றாலும் அதை 180 நாள் வரை நீட்டலாம். 2014 இல் உச்சநீதிமன்றம் அளித்த வடாலி தீர்ப்பின் ஊடாக UAPA வழக்குகளில் ஜாமீன் பெறுவது மேலும் சிக்கலாக்கப்பட்ட்து. இப்படியான கடும் நிபந்தனைகளின் ஊடாக இன்று இன்று இச்சட்டத்தின் கீழ் குற்றம் நிறுவப்படாமலேயே சிறைகளில் அடைப்பட்டுக் கிடக்கும் காலம் அதிகமாகிறது. இரண்டு ஆண்டுகள் வரையும், சில நேரங்களில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலும் கூட குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படுவதில்லை.

பயங்கரவாதிகளா ?:

2019 இல் மோடி அரசு குடிமக்களில் எந்த ஒரு தனிநபரையும் ”பயங்கரவாதி” என் அறிவித்து அவரது சொத்துக்களைக் கைப்பற்றும் அதிகாரத்தை எடுத்துக் கொண்டது. மாநிலங்கள் அவையில் எதிர்க் கட்சிகள் அதை ஒரு தேர்வுக் குழுவுக்கு (select committee) அனுப்பி ஒப்புதல் பெறவேண்டும் என முன்வைத்த கருத்து நிராகரிக்கப்பட்டது. ஒரு அமைப்பை அரசு தடை செய்தால் தடை செய்யப்பட்ட அமைப்பில் இருந்தோர் வெறொரு பெயரில் இயங்கத் தொடங்கிவிடுவதால் தனி நபர்களையே பயங்கரவாதிகள் என அறிவிக்க வேண்டிய நிலை அரசுக்கு ஏற்பட்டுள்ளது என்பதாக அமித்ஷா இச்சட்டத்திற்கு நியாயம் கற்பித்துள்ளார்.

குறிப்புகள் :

  1. நாடாளுமன்றத்தில் அரசு அறிவித்துள்ள இவ்விவரங்கள் இன்றளவும் இவ்வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையை உள்ளடக்கியதல்ல. எடுத்துக்காட்டாக தொடக்கத்தில் கூறப்பட்டவை 2016, 2017, 2018 ஆகிய ஆண்டுகளில் செய்யப்பட்ட கைதுகளை மட்டுமே குறிக்கின்றன.
  2. இந்திய அளவில் அதிகமாகக் கைது செய்யப்படுவர்கள் முஸ்லிம்கள், பழங்குடிமக்கள், தேர்தல் அரசியலில் பங்கு பெறாத சிறு அமைப்பினர், நக்சல்பாரி இயக்கத்தினர், அறிவுஜீவிகள் ஆகியோர் என்பது குறிப்பிடத் தக்கது.

ஆக்கம்: அந்தோணிசாமி.