Corona Virus Maharashtra

‘கும்பமேளாவிலிருந்து திரும்புபவர்கள் கொரோனாவை ‘பிரசாதமாக’ விநியோகிப்பார்கள்..’ மும்பை மேயர் கிஷோரி கருத்து ..

கும்பமேளாவில் பக்தர்களுக்கும், சாதுக்களுக்கு தொடர்ந்து தொற்று அதிகரித்து வருவதால் பெயரளவுக்கு நடத்துவதே சரியாக இருக்கும், அதாவது அடையாளம் என்ற வகையில் மட்டும் கும்பமேளாவை கொண்டாடுங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறிய சில மணி நேரங்களுக்குப் பிறகு மும்பை மேயர் கிஷோரி பெட்னேகர் கும்ப மேளாவில் இருந்து திரும்புபவர்கள் தத்தம் மாநில மக்களுக்கு கொரோனாவை தான் பிரசாதமாக வழங்குவார்கள் என கருத்து தெரிவித்துள்ளார்.

கும்பமேளாவிலிருந்து அந்தந்த மாநிலங்களுக்குத் திரும்புபவர்கள் கொரோனாவை ‘பிரசாதமாக’ விநியோகிப்பார்கள் “என்று பிஎம்சி மேயர் செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ.யிடம் தெரிவித்துள்ளார்.

மும்பைக்காரர்களில் 95% பேர் கோவிட் -19 வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிப்பதாகவும், மீதமுள்ள 5% பேர் மற்றவர்களுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்துவதாகவும் பெட்னேகர் கூறினார்.

ஹரித்வாரில் நடந்து வரும் கும்பமேளாவில் பங்குபெற்ற 30 சாதுக்கள் கொரோனா நோய் தோற்று ஏற்பட்டுள்ளதாக தலைமை மருத்துவ அதிகாரி தெரிவித்தார்.

ஹரித்வார் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் எஸ்.கே.ஜா கூறுகையில், “ஹரித்வாரில் இதுவரை 30 சாதுக்கள் கொரோனா நோய் தோற்று ஏற்பட்டுள்ளது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. மருத்துவ அணிகள் அகதாக்களுக்கு செல்கின்றன, சாதுக்களின் ஆர்டி-பி.சி.ஆர் சோதனைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன. இந்த செயல்முறை ஏப்ரல் 17 முதல் மேலும் விரைவுபடுத்தப்படும் ” என்றார்.

ஹரித்வாரைச் சேர்ந்த கொரோனா வைரஸ்-பாசிட்டிவ் நோயாளிகளை வீட்டு தனிமைப்படுத்தலுக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும், வெளியில் இருந்து வந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதாகவும் முதல்வர் அலுவலகம் சார்பாக தெரிவிக்கபட்டுள்ளது.