Activists Tamil Nadu

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை வரவேற்போம், இந்தியாவின் புறக்கணிப்பைக் கடுமையாக எதிர்ப்போம் – எஸ்.பி உதயகுமார்

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை வரவேற்போம். இந்தியாவின் புறக்கணிப்பைக் கடுமையாக எதிர்ப்போம் என எஸ்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை கீழே வழங்கப்படுகிறது.

ஐ.நா. மன்றத்தின் மனித உரிமைகள் ஆணையத்தில் இன்று நடந்த வாக்கெடுப்பில் ஈழத்தமிழருக்கு எதிராக இலங்கை அரசு நடத்திய மனித உரிமைகள் மீறல் பற்றி பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும். என்கிற தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

இந்த முக்கியமான தீர்மானத்தை உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் ஒன்றாய் நின்று வரவேற்போம். பனிரெண்டு ஆண்டு காலமாகத் தொடர்ந்து நடத்தப்பட்ட பொது விவாதங்கள், கலந்துரையாடல்கள், கருத்துப் பரிமாற்றங்கள், இடையறா முயற்சிகள், தொடர் போராட்டங்களுக்குக் கிடைத்திருக்கும் மாபெரும் வெற்றி இது.

உலகப் பந்தின் ஒரு மூலையில் இருக்கும் ஆர்ஜென்டினா நாடும், ஆப்ரிக்கக் கண்டத்தின் அந்தப் பக்கம் இருக்கும் ஐவரி கோஸ்ட் நாடும் இலங்கையின் இனப்படுகொலை அநியாயத்துக்கு நீதிகோருகின்றன. பிரிட்டன், பிரான்சு, ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, டென்மார்க், ஆஸ்திரியா போன்ற மேற்கு ஐரோப்பிய நாடுகள் கொன்றொழிக்கப்பட்ட தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கின்றன.

[சீனா, கியூபா, ரஷ்யா போன்ற நாடுகளும், தெற்காசிய நாடுகளில் வங்காளதேசம், பாகிஸ்தான் போன்றவையும் கொலைபாதகக் கொழும்புக்கு ஆதரவாக வாக்களித்திருக்கின்றன.]

ஆனால் ஜப்பான், நேபாளம், இந்தியா உள்ளிட்ட பதினான்கு நாடுகள் இந்த முக்கியமான வாக்கெடுப்பைப் புறக்கணித்திருக்கின்றன. ஜப்பானும், நேபாளமும் புறக்கணித்துவிட்டுப் போகட்டும்.

ஆனால் எட்டுக் கோடி தமிழர்கள் வாழும் இந்தியா எப்படிப் புறக்கணிக்கலாம்? ஏதோ கொஞ்சம் தமிழர்கள் வாழும் ஃபிஜி நாடே அம்மக்களின் உணர்வுகளை மதித்து, இலங்கை அரசைக் கடிந்துகொள்ளும்போது, அகில உலகிலும் அதிகமானத் தமிழர்கள் வாழும் நாடான இந்தியா எப்படி தமிழர்கள் உணர்வைப் புறக்கணிக்கலாம்? ஐ.நா. மன்றத்தில் இருக்கும் இந்தியப் பிரதிநிதிகள் இங்குள்ள எட்டுக் கோடி தமிழர்களையும் சேர்த்துத்தானே பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள்? அல்லது தமிழர்கள் ஒருவேளை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லையோ?

தமிழ் நாட்டிலிருந்து 20 கி.மீ. தூரத்தில் நடக்கும் இனப்படுகொலையைத் தடுக்க, 2,000 கி.மீ. தூரம் சென்று (தில்லியில்) போராட வேண்டியிருக்கிறதே என்கிற கூக்குரல்கள் 2009-ஆம் ஆண்டு காலக்கட்டத்திலேயே இங்கே ஒலித்தன.

நம் தொப்புள்கொடி உறவுகளுக்கு நியாயம் கேட்க எங்கோ இருக்கும் பிரிட்டனும், ஜெர்மனியும், மலாவியும் முயற்சிகள் மேற்கொள்ளும்போது, நாம் மீண்டும் ஒரு கையறுநிலைக்கு தள்ளப்படுவது துர்பாக்கியமானது.அரசியல் சாணக்கியத்தோடுதான் இந்தியா வாக்களிப்பைப் புறக்கணித்தது என்று விளக்கமும், விவரணமும் இப்போது அளிக்கப்படுகின்றன.

இலங்கை நடத்தியிருக்கும் குற்றம் சாதாரணச் செயல் அல்ல, இனப்படுகொலை என்பதை இந்திய அரசு உள்வாங்கியிருக்கிறதா என்கிற சந்தேகம் எழுகிறது.

வங்காள மொழி பேசும் பாகிஸ்தானியர்கள் இனப்படுகொலையை எதிர்கொண்டபோது, ஆர்ப்பரித்தெழுந்த இந்திய ஆளும்வர்க்கம், தமிழர்கள் கொல்லப்படும்போதும், அதன் பிறகும் இப்படி கண்டும் காணாமலும் நடந்துகொள்வது ஏன் என்று நம் மனங்களில் சந்தேகங்கள் எழுகின்றன. ஒருவேளை, அனைத்து இந்தியர்களும் சமம், தமிழர்கள் கொஞ்சம் குறைவான சமமோ என்கிற ஐயமும் எழுகிறது.இந்தியாவையும் நம்ப வேண்டாம், யாரையும் நம்ப வேண்டாம்.

உலகத் தமிழினப் பிரதிநிதிகள் வாக்கெடுப்பில் இலங்கை அரசுக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளுக்கும், புறக்கணித்த நாடுகளுக்கும் உடனடியாகச் சென்று அந்நாடுகளின் அரசியல் சமூகங்களிலும், குடிமைச் சமூகங்களிலும் ஈழ இனப்படுகொலை குறித்த விழிப்புணர்வை உருவாக்க வேண்டும்.பன்னாட்டு நீதிமன்றத்தில் விசாரணையை உடனடியாகத் துவங்கவும், அதனை திறம்படத் தொடரவும், வாதாடி நீதி பெறவும் ஆவன அனைத்தும் செய்வோம்.