Gujarat Indian Judiciary Minority Muslims

சிமி இயக்கத்தவர் என கூறி கைது செய்யப்பட்ட 127 பேறும் 20 ஆண்டுகளுக்கு பிறகு குற்றமற்றவர்கள் என நீதிமன்றம் தீர்ப்பு !

குஜராத், சூரத் : கடந்த 2001 ஆம் ஆண்டு, ராஜேஸ்ரீ ஹாலில் இருந்து சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (யுஏபிஏ) பல்வேறு பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்ட 127 குற்றவாளிகளும், குற்றமற்றவர்கள் என இன்று (சனிக்கிழமை) நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனினும் இவர்கள் கைது செய்யப்படும் போது தொடர் செய்திகளாக்கி டி.ஆர்.பி ரேட்டிங்கை அதிகரித்து கொண்ட தொலைக்காட்சி ஊடகங்கள் யாவுமே, கைது செய்யப்பட்டவர்கள் நிரபராதிகள் எனபதை ஏனோ செய்தி ஆக்காமல் உள்ளனர்.

ஐந்து பேர் மரணம்:

கைது செய்யப்பட்ட 127 பேர்களில் ,ஐந்து பேர் ஏற்கனவே இறந்துவிட்டனர், மற்றவர்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக குற்ற சுமையுடன் கடும் வேதனையான வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்களில், 111 பேர் நீதிமன்றத்தில் ஆஜர் ஆயினர். வழக்கில் இருந்து விடுவிக்கப்படுது குறித்து மகிழ்ச்சியடைந்தனர், எனினும் கடந்த 20 ஆண்டு காலமாக அவர்கள் குற்றச்சாட்டுகளையும் சமூக களங்கத்தையும் சுமக்க நேர்ந்ததை எண்ணி கவலை கொண்டுள்ளனர்.

கைது செய்யப்படல் :

மத்திய அரசு செப்டம்பர் 27, 2001 தேதியிட்ட அறிவிப்பின் மூலம் சிமிக்கு தடை விதித்தது.தடைசெய்யப்பட்ட அமைப்பான சிமியில் உறுப்பினர்களாக இருப்பதாகவும், அமைப்பின் நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கும் விரிவுபடுத்துவதற்கும் நகரத்தின் சாக்ராம்புராவில் உள்ள ஒரு மண்டபத்தில் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்ததாக கூறி 127 நபர்களை டிசம்பர் 28, 2001 அன்று யுஏபிஏவின் பல்வேறு பிரிவுகளின் கீழ் சூரத்தின் அத்வாலின்ஸ் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் குஜராத் தமிழ்நாடு, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகா, உத்தரபிரதேசம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்கள்.

வழக்கறிஞர் கூற்று:

சட்டவிரோதமாக ஒன்று கூடிய குற்றச்சாட்டு ஆகட்டும், சட்டவிரோத புத்தகங்கள் கைது செய்யப்பட்ட இடத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு ஆகட்டும், இரண்டையுமே அரசு தரப்பால் நிரூபிக்க முடியவில்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக எந்தவொரு குற்றமும் செய்யாமல், ஒரு வேதனையான வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர் என குற்றம்சாட்டப்பட்டவர்களின் வழக்கறிஞர் எம்.எம். ஷேக் கூறினார்.

இத்தனை வருடங்களாக, அவர்கள் இழந்த கவுரவத்திற்கும், அனுபவித்த வேதனையையும் யார் பதில் சொல்வார்கள், எப்படி ஈடு செய்ய முடியும். பாதிக்கப்பட்டவர்களில் பல உயர் கல்வி கற்றவர்கள் மற்றும் வணிக நிறுவனர்கள் உள்ளனர்” என்று ஷேக் கூறினார்.

பொய் குற்றச்சாட்டு:

நாங்கள் யாரும் சிமியைச் சேர்ந்தவர்கள் அல்ல என்றும் அகில இந்திய சிறுபான்மை கல்வி வாரியத்தின் பதாகையின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கில் பங்கேற்க அங்கு கூடியிருந்ததாகவும் பாதிக்கப்பட்டவர்கள் கூறி வந்தது நீதிமன்றத்தின் இத்தீர்ப்பின் மூலம் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மத மற்றும் கல்வி தொடர்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கில் அமைதியான முறையில் பங்கேற்க வந்திருந்ததாக அவர்கள் கூறினர்.

இந்த தீர்ப்பை குற்றவியல் தலைமை நீதித்துறை நடுவர் அமித் டேவ் அளித்தார்.

இவர்கள் எவருக்கும் இழப்பீடு தொகை வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.