RSS Telangana

வாகன ஓட்டிகளை சோதனையிட ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்களுக்கு எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை- தெலுங்கானா கமிஷ்னர் அறிவிப்பு ..

சோதனைசாவடிகளில் சோதனை மேற்கொள்ள ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்தவர்களுக்கு எந்த வித அனுமதியும் வழங்கப்பட வில்லை என தெலுங்கானா காவல்துறை தெரிவித்துள்ளது.

ஹைதராபாத்தின் புறநகர் நெடுஞ்சாலையில் ஆர்.எஸ்.எஸ் சீருடையில் சிலர் லத்திகளை கொண்டு நிற்கும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலானது.

“ஆர்.எஸ்.எஸ் தன்னார்வலர்கள் தெலுங்கானாவின் யாதத்ரி புவனகிரி மாவட்ட சோதனைச் சாவடியில் தினமும் 12 மணி நேரம் காவல் துறைக்கு உதவுகிறார்கள்.” என்று செய்தியுடன் @friendsofrss என்ற கணக்கில் இருந்து இந்த புகைப்படங்கள் முதலில் ட்வீட் செய்யப்பட்டது.

https://twitter.com/friendsofrss/status/1248306555604201472

இந்த புகைப்படங்கள் கடந்த ஏப்ரல் 9ம் தேதி வெளியானதை தொடர்ந்து, இப்போது காவல்துறையும் அவுட்சோர்ஸ் செய்யப்படுகிறதா, இந்த வேலையைச் செய்ய ஆர்.எஸ்.எஸ். அமைப்பினருக்கு என்ன அதிகாரம் உள்ளது எஎன்று கேட்டு பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதே ஒரு அரசியல் கட்சியினரோ , பாப்புலர் பிராண்ட் போன்ற அமைப்பினரோ இவ்வாறு சோதனை சாவடியில் ஈடுபட்டால் பாஜக. வாய் மூடி இருந்திருக்குமா எனவும் பலர் கேள்வி எழுப்பி உள்ளனர்.

ராச்சகொண்டா போலீஸ் கமிஷனர் மகேஷ் பகவத், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் வாகனங்களை சோதனை செய்து, வாகன ஓட்டிகளிடமிருந்து அடையாள அட்டைகளைக் கேட்பது போலான புகைப்படங்களின் நம்பகத்தன்மையையும், சம்பவத்தையும் உறுதிப்படுத்தினார்.

போலீசாருடன் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் உள்ள புகைப்படங்கள் வைரல் ஆனதை தொடர்ந்து..

“நேற்று (வியாழக்கிழமை) முந்தைய நாள் போங்கிரிடமிருந்து சில புகைப்படங்கள் பார்க்க முடிந்தது. அவர்கள் (ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள்) தன்னார்வத் தொண்டுக்கு வந்ததை நாங்கள் விசாரித்து உறுதிப்படுத்தியுள்ளோம். எங்கள் கடமையை எங்களால் செய்து கொள்ள முடியும், உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள் என்று போலீசார் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்களிடம் பணிவுடன் சொல்லி விட்டனர்.அதனை ஏற்று ஆர்.எஸ்.எஸ் தன்னார்வலர்கள் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் சோதனைச் சாவடிக்கு வரவில்லை.”

மேலும் “இது காவல்துறையின் வேலை, எங்களால் அதை செய்து கொள்ள முடியும். வாகன ஓட்டிகளை சோதனை செய்ய அவர்களுக்கு எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை” என்றார் கமிஷனர் மகேஷ் பகவத்.