Alleged Police Brutalities Indian Judiciary Muslims

“‘தீவிரவாதி’ பட்டம் இனி இல்லை, இழந்த ஒன்பது ஆண்டுகளை யார் திருப்பி தருவார்கள் ?”

யுஏபிஏ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு விடுவிக்கப்பட்ட ஐந்து பேரில் ரஷித் மற்றும் ஷாஹித் ஆகியோர் அடங்குவர்.

முஹமது ரஷீத்தின் வாடிக்கையாளர்கள் அவரை “பயங்கரவாதி” மற்றும் “ஜிஹாதி” என்று அழைத்ததால் ரஷித்தின் தந்தை தனது கடையை மூட வேண்டியதாயிற்று. ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு போலீஸ் கதவைத் தட்டியபோது இழந்த வேலையை ஷாஹித் இன்னும் திரும்பப் பெறவில்லை. அதுவே அவரது குடும்பத்தின் ஒரே வாழ்வாதாரமாக இருந்தது.

“பயங்கரவாதி என்ற முத்திரையுடன் நான் வாழ… எனது குடும்பமோ சமூகத்தால் ஒதுக்கப்பட்ட,அந்த பயங்கரமான ஆண்டுகளை ​​​​எந்த ஒன்றாலும் ஈடுசெய்ய முடியாது,” என்று வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, 35 வயதான ரஷித் கூறினார்.

“சிறையில் இருந்தபோது எனது தலைவிதியை நினைத்து நான் அதிகமாக அழுதேன், என் குடும்பத்தை மீண்டும் பார்க்க முடியுமா என்று யோசித்துக்கொண்டிருந்தேன்” என்று ஷாஹித் கூறினார். கைது செய்யப்படும் போது அவருக்கு வயது 22.

பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதக் குழுவான லஷ்கர்-இ-தொய்பா (LeT) உடன் தொடர்பு வைத்திருந்ததற்காக, ஷாஹீத். ரஷீத், மேலும் மூவருடன், 2013 ஆம் ஆண்டில், கடுமையான யுஏபிஏ சட்டத்தின் கீழ் டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவால் கைது செய்யப்பட்டனர். இந்தியாவில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட பணம் திரட்டுவதற்காக ஒரு தொழிலதிபரை கடத்தும் திட்டத்தில் ஈடுபட்டதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இவர்களின் மீது சுமத்தப்பட்ட குற்றம் “எந்தவொரு நம்பத்தகுந்த ஆதாரங்களைக் காட்டிலும் யூகங்கள் மற்றும் ஊகங்களின்” அடிப்படையிலானதாக உள்ளதாக கூறி மே 9,2022 அன்று, ஐவரும் டெல்லி நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர்.

அனுபவித்த துயரங்கள்:

ஹரியானாவின் நூஹ் மாவட்டத்தில் பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்த திரு. ரஷீத், 2013 இல் கைது செய்யப்பட்டதிலிருந்து இந்த மாத தொடக்கத்தில் விடுவிக்கப்படும் வரை ஒன்பது ஆண்டுகால மன உளைச்சலை நினைவு கூர்ந்தார்.

“நான் ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தேன், வீட்டிலும் டியூஷன் எடுத்தேன். போலிஸ் என்னை வழக்கில் சிக்க வைத்து என் வாழ்வின் பல ஆண்டுகளை இழந்தேன்,” என்று திரு. ரஷீத் கூறினார்.

திகார் சிறைக்குள் ஒரு சிறிய அறைக்குள் அவர் கழித்த நேரத்தைப் பற்றி பேசிய திரு. ரஷீத், நிரபராதி என்று விடுவிக்கப்படுவது ஒருபுறம் இருக்க, ஜாமீன் வழங்கப்படும் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டிருந்ததாகக் கூறினார்.

சிறையில் இருந்த காலத்தில் “எனது குடும்பத்தினரையும், தீவிரவாதிகளின் உறவினர் என்ற அவப்பெயரை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை நான் யோசித்து கொண்டிருப்பேன். எனது உறவினர்களும் அண்டை வீட்டாரும் எனது குடும்பத்துடனான அனைத்து உறவுகளையும் துண்டித்துவிட்டனர். சில வருடங்களுக்கு முன்பு காலமான என் தாத்தா பாட்டியின் முகத்தை கூட என்னால் பார்க்க முடியவில்லை,” என்று அவர் மேலும் கூறினார்.

“பயங்கரவாதி” மற்றும் “ஜிஹாதி” பட்டங்கள் :

அவர் கைது செய்யப்பட்ட பிறகு, வாடிக்கையாளர்கள் அவரது தந்தையின் மளிகைக் கடைக்கு வருவதை நிறுத்தினர். அவரது தந்தை “பயங்கரவாதி” மற்றும் “ஜிஹாதி” என்று அழைக்கப்பட தொடங்கினார்.

“எனது தந்தை கடைசியில் தனது கடையை மூட வேண்டியதாயிற்று, ஏனெனில் நிலைமை தாங்க முடியாத அளவிற்கு மோசமாகிவிட்டது” என்று திரு. ரஷீத் கூறினார்.

சிறையில் உள்ள சக கைதிகள் என்னை ஒரு பயங்கரமான குற்றவாளியாக பார்த்தார்கள். வாழ்நாளில் ஒருபோதும் நீதிமன்றத்திற்குச் செல்லாத அல்லது கைது செய்யப்படும் வரை நேரில் கூட சிறையை பார்க்காத என்னைப் போன்ற ஒருவருக்கு இது ஒரு அதிர்ச்சிகரமான காலமாக இருந்தது ”என்று அவர் மேலும் கூறினார்.

கைது செய்யப்பட்ட நாளை நினைவு கூர்ந்த ஷாஹித், :

நூஹ்வின் மீயோலி கிராமத்தில் இமாமாகப் பணியாற்றி ஷாஹித் கூறுகிறார், “நான் வெள்ளிக்கிழமை தொழுகைக்குத் தயாராகிக் கொண்டிருந்தபோது போலீசார் என் வீட்டிற்கு வந்தனர். ஒருவரின் தொலைபேசியில் எனக்கு எதிரான சில ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், அவர்கள் என்னை கைது செய்ய வந்திருப்பதாகவும் கூறினார்கள். என்னை தொழுகையை கூட முடிக்க விடவில்லை”.

கைது செய்யப்பட்ட ஐவரில் திரு. ஷாஹித் மட்டுமே 2018ல் டெல்லி உயர் நீதிமன்றத்தால் ஜாமீன் பெற்றவர்.

கைது செய்யப்பட்டு ஒரு மாதம் ஆகியும் கூட எந்த வழக்கின் கீழ் தம்மை கைது செய்துள்ளனர் என்பது கூட தெரியாமல் வைக்கப்பட்டிருந்ததாக கூறுகிறார் ஷாஹித்.

“யுஏபிஏ இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஜாமீன் பெறுவது மிகவும் கடினம் என்றும் திகார் சிறையின் சட்ட உதவி மையத்தில் உள்ள வழக்கறிஞர்கள் எங்களிடம் கூறினார்கள்” என ஷாஹித் கூறுகிறார்.

விடுதலைக்குப் பின் வாழ்க்கை:

தான் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்கும் முயற்சியில் தான் இழந்த ஒன்பது ஆண்டுகளை ஒருபோதும் திரும்ப பெற முடியாது என்று திரு. ரஷீத் கூறினார்.

“என் மருமகள் மற்றும் மருமகன்கள் என்னை அடையாளம் காண முடியவில்லை. பல வருடங்களுக்குப் பிறகு வீடு திரும்புவது ஒரே நேரத்தில் வினோதமாகவும் விசித்திரமாகவும் தெரிகிறது. எங்களுக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்று நீதிமன்றம் இப்போது சொல்கிறது, ஆனால் நாங்கள் அனுபவித்த சித்திரவதை மற்றும் துன்பங்கள்.. இதற்கு என்ன பதில் ?” என கேட்கிறார் ரஷீத். இழந்த ஆசிரியர் பணியும் இன்னும் திரும்ப கிடைக்கவில்லை., ரஷீதுக்கு.

கடந்த நான்கு ஆண்டுகளாக ஜாமீனில் வெளியில் இருந்த போதிலும், அவர் நீதிமன்ற விசாரணைகளுக்குச் செல்ல வேண்டியிருந்தபோது, ​​ஷாஹிதாலும் தனது இமாம் வேலையைத் திரும்பப் பெற முடியவில்லை. “எனது குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்கான ஒரே ஆதாரமாக எனது வேலை இருந்தது. இப்போது நான் அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டதால், நான் மீண்டும் வேலைக்கு செல்ல முயற்சிப்பேன்,” என்று ஷாஹித் கூறினார்.

நன்றி: தி ஹிந்து