International News Muslims

‘இந்தியா மிகப் பெரும் இன அழிப்புக்குத் தயாராகி வருகிறது’ – கிரிகரி ஸ்டாண்டன்

இந்தியா மிகப் பெரும் இன அழிப்புக்குத் தயாராகி வருகிறது என்ற அதிர்ச்சிகரமான தகவலை டாக்டர் கிரிகரி ஸ்டாண்டன் தெரிவித்துள்ளார். டிசம்பர் 12 ம் தேதி வாஷிங்டன் டி.சி.யில் “காஷ்மீர் மற்றும் என்.ஆர்.சி பற்றிய களநிலவரம்” என்ற தலைப்பில் ஒரு மாநாட்டில் ஜெனோசைட் வாட்சின் நிறுவனர் டாக்டர் கிரிகோரி ஸ்டாண்டன் உரையாற்றினார்.

அசாம் மற்றும் காஷ்மீர் மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக தொடர் வன்முறைகளை கட்டவிழ்த்து விடப்படுவதை சுட்டி காட்டிய அவர், இந்த இரண்டு மாநிலங்களிலும் முழுமையான ஒரு இனஅழிப்பு நடைபெற இன்னும் ஒரு படி மட்டுமே குறைவாக உள்ளதாக அதிர்ச்சிகர தகவலை தெரிவித்தார்.

இவர் இனப்படுகொலை கண்காணிப்பு என்ற பெயரில் ஒரு அமைப்பை நிறுவி உலகில் பல்வேறு நாடுகளில் நடந்த இனப்படுகொலைகள் பற்றிய விபரங்களை ஆதாரங்களுடன் உலகுக்கு வெளிப்படுத்தியவர்.

இந்தியாவில் முஸ்லிம்களின் இன அழிப்புக்கான பத்து படிகளை முன்வைத்துள்ளார். அவை:

1. வகைப்படுத்துதல் – மக்களை நாம் மற்றும் அவர்கள் என வகைப்படுத்துதல்.

2. அடையாளப்படுத்துதல் – பாதிக்கப்பட்டவர்களை அந்நியர்கள் என அடையாளப்படுத்துதல்.

3. பாகுபாடு காணுதல் – குடியுரிமை வழங்குவதில் பாகுபாடு பார்த்து நாடற்றவர்களாக ஆக்கி அவர்களுக்கு குடிமக்களுக்கான எந்த வித உரிமையும் கிடைக்காமல் செய்வதன் மூலம் மக்களிடையே பாகுபாடு காணுதல்.

4. மனிதத்தன்மையற்றவர்களாக சித்தரித்தல் – அவர்களை தீவிரவாதி என்றும் மனித சமூகத்தைப் பீடித்த நோய்க் கிருமிகள் எனவும் வசைபாடுவதன் மூலம் சமூக வெறுப்பை அவர்கள் மீது ஏற்படுத்தி அவர்களை மனிதத்தன்மையற்றவர்களாக சித்தரித்தல்.

5. இன அழிப்பை செய்வதற்காக நிறுவனம் ஒன்றை ஏற்படுத்துதல் – உதாரணம் கஷ்மீரில் ராணுவம் அஸ்ஸாமில் தேசிய குடியுரிமைப் பதிவேடு அதிகாரிகள்.

6. ஒன்றுகுவித்தல் – பிரச்சாரங்களின் மூலம் மக்களை ஒருபக்கமாக ஒன்று குவிப்பதன் மூலம் குறிப்பிட்ட மக்களை தனிமைப்படுத்துதல்.

7. தயாரிப்பில் ஈடுபடுதல்.

8. துன்புறுத்துதல் – கஷ்மீர் மற்றும் அஸ்ஸாமில் தற்போது நடந்து கொண்டிருப்பது.

9. ஒட்டுமொத்தமாக மக்களை அழித்தொழித்தல்.

10. மறுப்பு – செய்த படுபாதக செயலை மறுத்தல்.

டாக்டர் ஸ்டான்டன் ஏற்கனவே ருவாண்டா, புருண்டி, கம்போடியா மற்றும் ரோஹிங்யா இனப்படுகொலைகள் தொடர்பான உலக குற்றவியல் தீர்ப்பாயத்திற்கு ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு சபை சார்பில் தீர்மானங்களை வரைவு செய்தவர்.

தற்போது இந்தியா இன அழிப்பை நோக்கி நகர்கிறது என இவர் அறிக்கை அளித்திருப்பது உலக அளவில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் செய்தியை சுப்ரமணியன் சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் கவலையுடன் பகிர்ந்துள்ளது இதன் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது.

இந்திய அமெரிக்க எம்கேஜ் ஆக்சன், முஸ்லீம் கவுன்சில் (ஐ.ஏ.எம்.சி) மற்றும் மனித உரிமைகளுக்கான இந்துக்கள் (எச்.எஃப்.எச்.ஆர்) ஆகிய மூன்று அமெரிக்க அடிப்படையிலான சிவில் சமூக அமைப்புகளால் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆக்கம் : மீரான்.