Christians Hindutva Lynchings Muslims

ஜார்கண்டில் பழங்குடியின கிறிஸ்தவர்கள் அடித்து கொல்லப்பட்டதற்கு பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்!

ஜார்கண்டில் ஒரு பழங்குடியினர் கொல்லப்பட்டு இருவர் கடுமையாக காயமடையும் அளவிற்கு பசு பாதுகாவலர்கள் நடத்திய தாக்குதலை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய தலைவர் இ.அபுபக்கர் அறிக்கை விடுத்துள்ளார்.

ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள குந்தி மாவட்டத்தில், பசுவின் பெயரால் நடத்தப்பட்ட மற்றொரு கொடூர சம்பவத்தில் பசு பாதுகாப்பு என்ற பெயரில் வலம்வரும் கும்பல் படுகொலைகாரர்கள் ஒரு அப்பாவியை கொலை செய்து இருவரை கடுமையாக தாக்கியுள்ளனர். இம்முறை தாக்கப்பட்டவர்கள் பழங்குடி இனத்தை சேர்ந்த கிறிஸ்தவர்கள் ஆவர்.

பரவலான வெறுப்பு குற்றங்கள் காரணமாக ஜார்கண்ட் மாநிலம் சிறுபான்மையினருக்கு திகில் பிரதேசமாகி வருகிறது. பா.ஜ.க. அரசாங்கத்தின் கீழ் கும்பல் கொலைகாரர்கள் தண்டனையில் இருந்து பாதுகாப்பு பெற்று வருகின்றனர். புதிதாக திருமணமான 24 வயது தப்ரேஸ் அன்சாரி, ஜூன் மாதம் இதே போன்று மிருகத்தனமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

இந்த மடத்தனத்தை நிறுத்துவதற்கு தங்களுக்கு எண்ணம் இருக்கிறது என்பதை ஜார்கண்ட் அரசாங்கமும் காவல்துறையும் இன்னும் நிரூபிக்கவில்லை. அவர்களின் செயலற்ற தன்மையும் அலட்சியமும்தான் உண்மையில் சிறுபான்மையின மற்றும் பலகீனமான சமூகங்களை சேர்ந்த அப்பாவிகளை குறிவைப்பதற்கும் கொலை செய்திடுவதற்கும் குற்றவாளிகள் மற்றும் வகுப்புவாத சக்திகளுக்கு தைரியமூட்டும் முக்கிய காரணியாகும்.

கும்பல் கொலைகாரர்களின் வெறுப்பு சித்தாந்தத்தின் இலக்குகளாக முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், தலித்கள் மற்றும் ஆதிவாசிகள் உள்ளனர். தங்கள் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அனைத்து பாதிக்கப்பட்ட சமூகங்கள் திட்டமிட்டு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென இ.அபுபக்கர் அழைப்பு விடுத்தார்.

இப்படிக்கு

டாக்டர். முஹம்மது ஷம்மூன்,

தலைவர்ஊடகம் மற்றும் மக்கள் தொடர்பு,

பாப்புலர் ஃப்ரண்ட், தலைமையகம், புது தில்லி.

செப்டம்பர் 25, 2019,சென்னை (பத்திரிகை செய்தி)