Maharashtra

பதஞ்சலியின் கொரோனா மருந்தை மஹாராஷ்டிராவில் விற்க அனுமதிக்க மாட்டோம் – மாநில உள்துறை அமைச்சர் அதிரடி !

கொரோனா நோயை குணப்படுத்தும் என கூறி விற்பனை செய்யப்படும் பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் ‘கொரோனில்’ மருந்தை, உரிய சான்றிதழ் இல்லாமல் மகாராஷ்டிராவில் விற்பனை செய்ய அனுமதிக்க மாட்டோம் என்று அம்மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் இன்று தெரிவித்துள்ளார்.

கொரோனிலின் சோதனைகள் குறித்து இந்திய மருத்துவ சங்கம் (ஐ.எம்.ஏ) கேள்வி எழுப்பியுள்ளதாக மகாராஷ்டிரா அரசு சுட்டிக்காட்டியுள்ளது, அதே சமயத்தில் உலக சுகாதார அமைப்பும் (WHO) பதஞ்சலி ஆயுர்வேதத்தின் கூற்றுக்களை மறுத்துள்ளது.

கொரோனிலின் ‘மருத்துவ பரிசோதனைகள்’ குறித்தும், கோவிட் -19 சிகிச்சைக்கான அதன் செயல்திறன் குறித்தும் சந்தேகம் எழுந்துள்ளது என்று உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தெரிவித்தார்.

“இதுபோன்ற ஒரு மருந்தை மக்கள் பயன்பாட்டிற்கு அவசரமாக அறிமுகப்படுத்துவதும், அதற்குள் இரண்டு மூத்த மத்திய அமைச்சர்களின் ஒப்புதல் பெற்றுள்ளதும் மிகவும் வருந்தத்தக்கது. உலக சுகாதார அமைப்பும் (WHO), இந்திய மருத்துவ சங்கம் (IMA) மற்றுமுள்ள திறமையான சுகாதார அமைப்புகளிடமிருந்து சரியான சான்றிதழ் இல்லாமல் கொரோனில் விற்பனை மகாராஷ்டிராவில் அனுமதிக்கப்படாது” என்று மேலும் அமைச்சர் கூறினார்.