BJP Islamophobia Lynchings Madhya Pradesh Muslims

முஸ்லிம் என்ற சந்தேகத்தின் பேரில் பன்வர்லால் ஜெயினை அடித்து கொன்ற பாஜக தலைவர் !

65 வயதான பன்வர்லால் ஜெயின் என அடையாளம் காணப்பட்ட மாற்றுத்திறனாளி ஒருவர், பாஜக ஆளும் மத்தியப் பிரதேசத்தின் நீமுச் மாவட்டத்தில் முஸ்லீம் என்ற சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டதில் பலத்த காயமடைந்து உயிர் இழந்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“தேரா நாம் முகமது ஹய்?… ஆதார் கார்ட் திகா…’ (உங்கள் பெயர் முகமதுவா? உங்கள் ஆதார் அட்டையைக் காட்டு)” என்று பாஜக வை சேர்ந்த தினேஷ் ஜெயினிடம் கேட்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியான பிறகு இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

200 ரூபாயை பெற்று கொண்டு என்னை விட்டுவிடு என பெரியவர் கெஞ்சி கேட்டும் தீவிரவாதி தினேஷ் கொஞ்சமும் கருணையின்றி கொடூரமாக தாக்கி கொண்டே உள்ளார். இதை காணொளியில் காணலாம்.

பன்வர்லாலை அடித்தவர் மானசா முனிசிபல் கவுன்சில் முன்னாள் கவுன்சிலரும், பாஜக தலைவருமான தினேஷ் குஷ்வாஹா.

மத்திய பிரதேச மாநிலம் நீமுச்சில் உள்ள மானசா காவல் நிலைய எல்லைக்குள் இந்த சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

ரத்லாம் மாவட்டத்தின் ஜாரா தெஹ்சில் சார்சியில் வசிக்கும் பன்வர்லால் ஜெயின், தனது கிராமத்தை விட்டு நீமுச்சிற்கு வந்திருந்தார்.

சம்பவம் குறித்து போலீசார்:

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மானசா காவல் நிலையப் பொறுப்பாளர் கே.எல் டாங்கி, “ராம்புரா சாலையில் சடலத்தை மீட்டோம். அடையாளம் காண முடியாததால் , குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டு, அவரது புகைப்படம் பரப்ப பட்டது. பல முயற்சிகளுக்குப் பிறகு, இறந்தவர் பன்வர்லால் ஜெயின் என அடையாளம் காணப்பட்டார்.”

இறந்த நபரின் புகைப்படத்தை போலீசார் பரப்பிய பிறகு, அவரது சகோதரர் ராகேஷ் ஜெயின் அவரை அடையாளம் கண்டார். பிரேத பரிசோதனைக்குப் பிறகு இறுதி சடங்குகளுக்காக உடலை ராகேஷ் ஜெயினிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

“இன்று பன்வர்லால் ஜெயின் சகோதரர் ராகேஷ் ஜெயின் தனது மொபைலில் ஒரு வீடியோவைப் பெற்றார், அதில் ஒரு நபர் தனது சகோதரனைத் தாக்குவதைப் பார்த்தார். அவர் அளவில் விசாரித்துவிட்டு மானசாவிற்கு சென்றார்.. பின்னர் தான் மானசாவில் வசிக்கும் தினேஷ் குஷ்வாவால் அவரது சகோதரர் தாக்கப்பட்டதை அவர் அறிந்து கொண்டார்.”

-மானசா காவல் நிலையப் பொறுப்பாளர் கே.எல் டாங்கி

மானசா காவல் நிலையப் பொறுப்பாளர் கே.எல் டாங்கி
“இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 304 (அலட்சியத்தால் மரணத்தை ஏற்படுத்துதல்) மற்றும் பிரிவு 302, (கொலைக்கான தண்டனை) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, மேலும் நாங்கள் இந்த விஷயத்தை விசாரித்து வருகிறோம்,” என்று கூறினார்.

மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் மற்றும் பிற இணைப்புகளை ஆய்வு செய்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

மத்தியப் பிரதேசத்தில் கடந்த ஒரு வாரத்தில் நடந்த மூன்றாவது வன்முறை சம்பவம் இதுவாகும். கடந்த வாரம், இந்தூர் மாவட்டத்தில் உள்ள மோவ் தாசில்தார், ஒரு மனநலம் குன்றிய இளைஞரை, போலீஸ் முன்னிலையிலேயே ஒரு கும்பல் கடுமையாகத் தாக்கியது. பின்னர் அவர் இறந்தார். நான்கு பேர் மீது வழக்குப் பதிந்து குற்றவாளிகளை போலீஸார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.