Islamophobia Lynchings Muslims West Bengal

“ஜெய் ஸ்ரீ ராம்” கோஷமிட மறுத்ததற்காக பள்ளிவாசல் பராமரிப்பாளர் மீது தாக்குதல்!

மேற்கு வங்கம்: “ஜெய் ஸ்ரீ ராம்” என்று கோஷமிட மறுத்ததற்காக புதன்கிழமை அதிகாலையில் அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவரால் தாக்கப்பட்டதாக ஹூக்லியின் சின்சுராவில் உள்ள பள்ளிவாசலின் பராமரிப்பாளர் தெரிவித்துள்ளார்.இது குறித்து தி டெலிகிராப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

நடந்த சம்பவம்:

சின்சுராவில் உள்ள சக்பஜாரில் வசிக்கும் முகமது சுஃபியுதீன் (54 வயதானவர்), புதன்கிழமை அதிகாலை 3.45 மணியளவில், தனது வீட்டிலிருந்து மசூதிக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, ​​மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று இளைஞர்கள் அவரை வழிமறித்து, “ஜெய் ஸ்ரீ ராம் ” என கோஷமிட கட்டாயப்படுத்தி உள்ளனர்.

“நான் எனது மத அடையாளத்தைப் பற்றி அவர்களிடம் சொன்னேன், கோஷத்தை முழக்கமிட என்னை வற்புறுத்த வேண்டாம் என்று அவர்களிடம் கேட்டுக்கொண்டேன். அந்த நேரத்தில், இளைஞர்களில் ஒருவர் என்னை பலமாக அறைந்தார், நான் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து விட்டேன். நான் வலியால் அழ துவங்கினேன், இளைஞர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பினர். அதிகாலை நேரமாக இருந்ததால் அங்கு யாரும் சுற்றி இல்லை, ”என்றார் சுஃபியுதீன்.

“ஜெய் ஸ்ரீ ராம்” என்ற கோஷம் 2019 பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பாஜகவால் போர்க்குரலாக மாற்றப்பட்டுள்ளது.

காவல்நிலையத்தில் புகார்:

அந்த நாளின் பிற்பகுதியில் உள்ளூர் மசூதியில் கடந்த ஆறு ஆண்டுகளாக பள்ளி பராமரிப்பாளராக பணியாற்றி வரும் சுஃபியுதீன், அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் மீது சின்சுரா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

“நாங்கள் புகாரைப் பெற்றுள்ளோம், விசாரணையையும் துவங்கியுள்ளோம்” என்று சந்தர்நாகூர் போலீஸ் கமிஷனர் கவ்ரவ் சர்மா கூறினார்.

பாஜக தலைவர் கருத்து :

“எங்கள் கட்சி ஒருபோதும் யாரையும்‘ ஜெய் ஸ்ரீ ராம் ’என்று கோஷமிட கட்டாயப்படுத்தவில்லை. குற்றவாளிகள் எங்கள் கட்சியைச் சேர்ந்தவர்களா என்பது எனக்குத் தெரியாது. ஒருவேலை, அவர்கள் எங்கள் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அந்த நபரைத் துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி நான் காவல்துறையினரைக் கேட்டுக்கொள்கிறேன், ”என்று ஹூக்லியில் உள்ள பாஜக தலைவர் காவ்தம் சாட்டர்ஜி கூறினார்.

தேர்தல் காலம் என்பதால் இப்படியும் பாஜக தலைவரால் கருத்து சொல்ல முடிகிறது!

இது முதல் முறை இல்லை:

“இது என்னுடன் நடந்த முதல் நிகழ்வு அல்ல. 2019 வாக்கெடுப்பு முடிவு அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே, ஒரு பெரிய கூட்டத்தில் அங்கம் வகிக்கும் ஒரு இளைஞர், ‘காக்கா, ஜெய் ஸ்ரீ ராம் போலோ’ (மாமா, ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷமிடுங்கள்) என்று கூறினார். ஆனால் நான் இளைஞர்களுக்கு பதிலளிப்பதற்கு முன்பு, அவரது நண்பர் ஒருவர் அவரைக் கடிந்துகொண்டு, ஜெய் ஸ்ரீ ராம் கோஷமிட என்னை கட்டாயப்படுத்த வேண்டாம் என்று கூறினார், ”என்று சுஃபியுதின் கூறுகிறார்.

அவர் பல ஆண்டுகளாக வசித்து வரும் சின்சுரா நகரில் தனது மத அடையாளத்திற்காக தாக்கப்படுவோம் என்று தான் ஒருபோதும் நினைத்ததில்லை என்று சுஃபியுதீன் கூறினார்.

“அவர்கள் என்னை ஒரு முறை மட்டுமே அறைந்தனர், ஆனால் நான் அவர்களுக்கு ஒரு பாடம் கற்பிக்கவே போலீசில் புகார் செய்தேன். காவல்துறை நடவடிக்கை எடுத்தால், எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்களைச் செய்ய அவர்கள் துணிய மாட்டார்கள். எனது குழந்தை பருவத்திலிருந்தே இங்கு வாழ்ந்து வருகிறேன், எங்கள் பகுதியின் கலாச்சாரம் இதுவல்ல, ”என்கிறார் சுஃபியுதீன்.

பாஜக மீது குற்றச்சாட்டு:

சின்சுராவில் வகுப்புவாத நல்லிணக்கத்தை சீர்குலைக்க பாஜக முயற்சிப்பதாக ஹூக்லியில் உள்ள திரிணாமுல் தலைவர்கள் குற்றம் சாட்டினர்.

“சுஃபியுதீன் மீதான இந்த தாக்குதல் எங்களின் கலாச்சாரத்தையும் நல்லிணக்கத்தையும் சேதப்படுத்தும் பாஜகவின் ஒரு முயற்சியே. இந்த சம்பவத்தை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம், ”என்று திரிணாமுல் தலைவரும் மாநில விவசாய சந்தைப்படுத்தல் அமைச்சருமான தபன் தாஸ்குப்தா கூறினார்.

ஜூலை 2019 இல், வடக்கு தினாஜ்பூரில் “ஜெய் ஸ்ரீ ராம்” என்று கோஷமிட ஐந்து நபர்கள் மறுத்ததைத் தொடர்ந்து அவர்களை கால்நடை திருட்டு கும்பல் என குற்றம்சுமத்தி கும்பல் தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடதக்கது.