BJP Crimes Against Women Madhya Pradesh Rape

பாஜக இளைஞர் அணி தலைவர் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு; பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பணம் கேட்டும் மிரட்டல் !

பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்து பிளாக் மெயில் செய்ததாக ஜபல்பூரைச் சேர்ந்த பாஜகவின் யுவ மோர்ச்சா மண்டல தலைவர் (மண்டல் ஆத்யகாஷ்) ராஜேஷ் ஸ்ரீவஸ்தவ் மீது மத்தியப் பிரதேச போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அந்தப் பெண் தனது கணவருடன் பெண்கள் காவல் நிலையத்தை அணுகி ஸ்ரீவஸ்தவ் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்த பின்னரே இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஜூஸில் மயக்க மருந்து கலந்து கற்பழிப்பு:

குற்றம்சாட்டப்பட்டுள்ள பாஜக நிர்வாகி, பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு போவதும் வருவதுமாகவே இருந்துள்ளார். அவரது கணவர் அரசு ஊழியர், அவர் வீட்டில் இல்லாத நேரம் பார்த்தே போய் வந்துள்ளார் ராஜேஷ். இது போல் ஒரு முறை கணவன் இல்லாத சமயம் பார்த்து வீட்டிற்கு சென்ற பாஜக நிர்வாகி, பெண் தனக்காக கொண்டுவந்த ஜூஸ் ஒன்றில் பெண்ணிற்கு தெரியாமல் மயக்க மருந்தை அதில் கலந்து அவரையே குடிக்க செய்துள்ளளார். அதை குடித்த பின்னர் சுயநினைவை இழந்த அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் என ஜபல்பூர் போலீசார் தெரிவித்தனர்.

பணம் கேட்டு மிரட்டல்:

பெண்ணுடன் ஸ்ரீவஸ்தவ் உறவு கொண்டதை வீடியோவாகவும், புகைப்படங்களாகவும் எடுத்து சேமித்து கொண்டுள்ளார். செப்டம்பர் மாதம் (2020) கணவன் வீட்டிற்கு திரும்பிய பிறகும் தொல்லை கொடுத்து வந்துள்ளார் ஸ்ரீவஸ்தவ். தன்னுடன் பாலியல் உறவு வைத்து கொள்ள வேண்டும் அல்லது 10 லச்சம் ருபாய் தர வேண்டும், இல்லையென்றால் வீடியோ மற்றும் புகைப்படங்களை உன் கணவனுக்கு அனுப்பி விடுவேன் என கூறி அப்பெண்ணை மிரட்டி வந்துள்ளார் அந்த பாஜக நிர்வாகி. எனினும் அப்பெண் இந்த இரண்டு கோரிக்கைகளையும் ஏற்க மறுத்துள்ளார். அதனை தொடர்ந்து ஆபாச வீடியோ மற்றும் புகைப்படங்களை பாஜக நிர்வாகி அவரது கணவருக்கு அனுப்பியதாக ஜபல்பூர் போலீசார் தெரிவித்தனர்.

போலீசில் புகார்:

நடந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் தனது கணவரிடம் முழுமையாக கூறி உள்ளார். பின்னர் இருவரும் கடந்த மார்ச் 18 ம் தேதி காவல் நிலையத்திற்கு சென்று ஸ்ரீவஸ்தவ் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்திய தண்டனைச் சட்டத்தின் 376 (2-என்), 506 எல், 284 மற்றும் 384 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் ஸ்ரீவஸ்தவ் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். “குற்றம் சாட்டப்பட்டவர் பாஜகவின் யுவ மோர்ச்சாவின் தலைவர். பெண்ணின் புகாரின் அடிப்படையில் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளோம், அவர் விரைவில் கைது செய்யப்படுவார். ” என காவல்துறை கண்காணிப்பாளர் சித்தார்த் பாகுகுனா கூறினார். ராஜேஷ் ஸ்ரீவாஸ்தவா தற்போது வரை தலைமறைவாக உள்ளார்.

எனக்கு ஒன்றும் தெரியாது – பாஜக செய்தித் தொடர்பாளர் :

பாஜகவின் செய்தித் தொடர்பாளர் ரஜ்னீஷ் அகர்வாலை தொடர்பு கொண்டபோது, ​​”இந்த விஷயம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது, எனினும் சட்டம் தன கடமையை செய்யும்” என்று கூறினார்.