Corona Virus Intellectual Politicians Modi

‘ஆனானப்பட்ட பிரதமர் போய் ஒரு சாமியாரிடம் ஏன் விண்ணப்பம் வைத்துக் கொண்டிருக்க வேண்டும்?’ – ஸ்ரீதர் சுப்ரமணியம்

வெள்ளிக்கிழமை அன்று பிரதமர் சுவாமி அவதேஷானந்தா என்ற சாமியாரிடம் பேசி இருக்கிறார். கோவிட் அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு கும்ப மேளாவில் மிச்சம் இருக்கும் நிகழ்வுகளை மக்களைக் கூட்டாமல் வெறுமனே சடங்கு-ரீதியாக மட்டுமே செய்து முடித்து விடலாம், என்று பரிந்துரைத்து இருக்கிறார்.
அதன் விளைவாக ஜூனா அகாடா எனப்படும் சாமியார்கள் குழு கும்ப மேளாவில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்திருக்கிறது. சுவாமி அவதேஷானந்தாவும் கடைசி நாள் சடங்குகளை சனிக்கிழமையே செய்து முடித்து விடுவதாக அறிவித்து இருக்கிறார்.

இது நல்ல விஷயம்தான். ஆனால் கும்ப மேளாவின் முக்கிய நிகழ்வு என்பது ‘ஷாஹி ஸ்நான்’ எனப்படும் புனித நீராடல்தான். அது ஏப்ரல் 14ம் தேதியே நடந்து முடிந்து விட்டது. அதில் 9 முதல் 14 லட்சம் பேர் குழுமி நீராடி முடித்தாகி விட்டது. இவர்கள் எல்லாரும் அவரவர் ஊர்களுக்கு இப்போது திரும்பிப் போய்க்கொண்டு இருக்கிறார்கள். குதிரை ஓடிப்போன பின் லாயத்தைப் பூட்டி வைப்பது என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி இருக்கிறது. அந்த மாதிரிதான் இது. To close the stable door after the horse has bolted.

அது ஒரு புறம் இருக்க, எனக்கு ஒரு விஷயம் புரியவில்லை. பிரதமர் மாநில அரசின் முதல் அமைச்சரிடம் நேரடியாகவே பேசி இருந்திருக்கலாமே? உத்தராகண்ட் மாநிலத்தில் நடப்பது பாஜக ஆட்சிதான். அது கூட அவசியம் இல்லையே. எந்தக் கட்சியின் ஆட்சியாக இருந்தாலும் சரி. பேசி இருக்கலாமே? அல்லது பிரதமர் கூட வேண்டாம். உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒரே ஒரு ஃபோன் போட்டு கும்ப மேளா விழாவினை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கலாம். ஒருவேளை ஏதோ காரணத்துக்காக முதல்வர் இவர்கள் பேச்சை கேட்க மாட்டார் என்று வைத்துக் கொண்டாலும், கஷ்மீருக்கும், தில்லிக்கும் அதிரடி சட்டங்கள் போட்டு அதிகாரத்தை கைப்பற்றுபவர்கள் உத்தராகண்ட் மத விழாவுக்கு ஒரு அதிரடி சட்டம் போட்டு மேட்டரை முடித்து வைத்திருக்கலாமே?

அதையெல்லாம் செய்யாமல் ஆனானப்பட்ட பிரதமர் போய் ஒரு சாமியாரிடம் ஏன் விண்ணப்பம் வைத்துக் கொண்டிருக்க வேண்டும்? மாநில முதல்வரை விட அந்த சாமியாருக்கு அதிக அதிகாரம் இருக்கிறதா? சரி பிரச்சினை பெரிதாகாமல் சுமுகமாக விஷயத்தை முடிக்கவே அப்படி செய்தார் என்றால் இதே சுமுக அணுகுமுறைகளை ஏன் சிஏஏ, விவசாய சட்டம், கஷ்மீர் போன்றவற்றில் கைக்கொள்ளவில்லை? அங்கே எல்லாம் ‘அதிரடிக்காரன் மச்சான்’ என்று பாட்டுப் பாடி விட்டு இங்கே வந்து ஒரு சாமியாரிடம் ஏன் குழைய வேண்டும்?