Bihar CAA NRC

பிஹார் : CAA,NRC கணக்கெடுப்பாக இருக்கலாம் என்று எண்ணி குழுவினரை சிறைபிடித்த மக்கள்..

குடியுரிமை எதிர்ப்பு (திருத்தம்) சட்டம் (சி.ஏ.ஏ), தேசிய குடிமக்களின் பதிவு (என்.ஆர்.சி) மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவு (என்.பி.ஆர்) ஆகிவற்றிற்கு எதிராக பீகாரின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் பரவி வருவதால், தனியார் ஆராய்ச்சி மற்றும் மார்க்கெட்டிங் நிறுவனங்கள் கணக்கெடுப்புகளை மேற்கொள்வதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அவ்வாறான கணக்கெடுப்பை மேற்கொண்டால் மக்களால் தாக்கப்படலாம் என்ற அச்சமும் மாநிலம் முழுவதும் நிலவுகிறது. இந்நிலையில் சமீபத்தில் தனியார் ஆராய்ச்சி அமைப்பின் சார்பாக சர்வே மேற்கொள்ள வந்த சிலரை என்.பி.ஆர் அதிகாரிகள் என எண்ணி மக்கள் சிறைபிடித்துள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது.

தவறாக சிறைபிடிக்கப்பட்ட குழு

அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி ஆராய்ச்சியாளர் ஒருவரின் ஆராய்ச்சி தேவைக்காக லக்னோவில் செயல்படும் நிறுவனமான மோர்சல் ரிசர்ச் அண்ட் டெவலப்மென்ட் பிரைவேட் லிமிடெட் சார்பில் 4 பெண்கள் உட்பட 12 பேர் கொண்ட குழு ஒன்றை வெள்ளிக்கிழமையன்று தர்பங்கா மாவட்டத்தின் ஜமல்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஜாகருவா கிராமத்து மக்கள் சிறைபிடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

பி.எச்.டி அறிஞர் ஷிகர் சிங், அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தில் “அரசியல் விருப்பங்களில் சமூக அடையாளத்தின் பங்கு” என்ற தலைப்பில் ஆராய்ச்சி செய்து வருவதாகக் கூறப்படுகிறது. இவருக்கு உதவ போய் அவர்கள் சிக்கி கொண்டுள்ளனர்.

CAA மற்றும் NRC க்கு ஆதரவாக கணக்கெடுப்பு நடத்த போகிறார்கள் என்று எண்ணியும், அவர்கள் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்ற அனுமானத்தின் பேரிலும் கிராம மக்கள் அவர்களை சிறைபிடித்துள்ளனர்.

போலீசார் வந்ததால் தப்பினர் :

“தகவல் கிடைத்த உடனே, நாங்கள் விரைவாக அந்த இடத்தை அடைந்து 12 பேர் கொண்ட குழுவை கிராமத்திலிருந்து வெளியேற்றினோம் … நாங்கள் தாமதமாக சென்று இருந்தால், அவர்கள் கிராம மக்களால் தாக்கப்பட்டிருப்பார்கள்” என்று ஜமல்பூர் காவல் நிலைய அதிகாரி அன்வர் அன்சாரி கூறினார்.

இது 2ம் சம்பவம் :

“இதே போல கடந்த ஜனவரி 17 ஆம் தேதி, குர்கானை தளமாகக் கொண்ட ஒரு தொலைக்காட்சி நிறுவனத்திற்காக கணக்கெடுப்பொன்றை மேற்கொண்ட ஒருவர், தர்பங்கா நகரப் பகுதியின் கரமகஞ்ச் பகுதியில் உள்ள மக்களால் தாக்கப்பட்டார். CAA மற்றும் NRC க்கான தரவுகளை சேகரித்ததாக எழுந்த சந்தேகத்தின் பேரில் அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கணக்கெடுப்பை மேற்கொண்டவர் பிரின்ஸ் சிங் என அடையாளம் காணப்பட்டு போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.

சம்பரன், பெகுசராய் மற்றும் பாகல்பூர் போன்ற மாவட்டங்களிலும் இது போன்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

பீகாரில் பட்டிதொட்டிகளில் எல்லாம் சிஏஏ, என்ஆர்சி க்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் வேளையில், மக்கள் கடும் கோபத்தில் உள்ளதை அறிந்து கணக்கெடுப்பு என்ற பெயரில் கூட யாரும் செல்லாமல் இருப்பது என்பதே சிறந்தது என்கின்றனர் உள்ளூர்வாசிகள்.