Alleged Police Brutalities BJP Maharashtra

பெண் காவலரிடம் தவறான பேச்சு; பாஜக எம்எல்ஏ கைது !

ஒருபுறம், பாரதீய ஜனதா-சிவசேனா காட்சிகள் எதிர்வரும் மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து தீர்மானிப்பதில் மும்முரமாக உள்ளது. மறுபுறம், மகாராஷ்டிராவின் ஆளும் பாஜக அரசின் எம்.எல்.ஏ ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

பாஜக எம்எல்ஏ சரண் வாக்மரே ஒரு பெண் காவலர் ஒருவரிடம் தவறாக நடந்து கொண்டதால் போலீசாரால் சனிக்கிழமை (28-9-19) கைது செய்யப்பட்டார். இவர் மகாராஷ்டிராவில் உள்ள தும்சர் மொஹாடி சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ ஆவர்.

செப்டம்பர் 16 ஆம் தேதி, தும்சர் நகரில் வேளாண் உற்பத்தி சந்தைக் குழுவின் வளாகத்தில் வைத்து நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது பாரதிய ஜனதா கட்சி நகரத் தலைவர் அனில் ஜிபகத்தே விற்கும் பெண் காவல்துறை துணை ஆய்வாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அந்த சமயத்தில் அனில் தன்னை நோக்கி தவறாக வார்த்தைகளால் வசை பாடியதாக பாதிக்கப்பட்ட பெண் காவலர் புகாரில் தெரிவித்துள்ளார். பிரச்னையை தீர்த்து வைக்கிறேன் என்று பாஜக எம்எல்ஏ சரண் களமிறங்க அவரும் அந்த பெண் போலீசாரிடம் தவறாக பேசியுள்ளார். இதனை தொடர்ந்து பெண் காவலர் அளித்த புகாரின் பேரில் IPC 353, 354, 294, 504, 506 பிரிவுகளின் கீழ் மஹாராஷ்டிரா மாநில பண்டாரா போலீசார் சரணை கைது செய்துள்ளனர்.

இவர் நீண்ட காலமாக பாஜகவில் பயணித்து வருபவர்.2012 இல், பண்டாரா ஜில்லா பரிஷத்தின் நிதி மற்றும் பணிக்குழுவின் தலைவராக இருந்தார். 2014 இல் பண்டாரா மாவட்ட பாஜகவின் தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.