Christians Kerala Political Figures

‘2021ல் இந்தியாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக 486 வன்முறை தாக்குதல் சம்பவங்கள்’ – கேரள முதல்வர் பினராயி

கொச்சி: ​​இந்தியாவில் கடந்த ஆண்டில் மட்டுமே, 486 கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறை தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளது குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் நினைவுகூர்ந்தார்.

வரவிருக்கும் திருக்காக்கரை இடைத்தேர்தலை ஒட்டி பிரச்சார கூட்டம் ஒன்றில் பங்கேற்ற முதல்வர் பினராயி விஜயன், முன்னாள் எம்எல்ஏ பிசி ஜார்ஜின் வெறுப்புப் பேச்சு குறித்தும், அவருக்கு பாஜக ஆதரவு அளித்து வருவது குறித்தும் அவர் குறிப்பிட்டு பேசினார்.

கடந்த ஆண்டு, நாட்டின் பல பகுதிகளில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான 486 தாக்குதல்கள் நடந்தன. நம் மாநிலத்திலும் அப்படி நடக்கலாம் என்று நினைப்பவர்களும் சங்க பரிவாரத்தில் இருக்கிறார்கள். ஆனால் மற்ற மாநிலங்களைப் போல் அல்லாமல் இங்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது அவர்களுக்குத் தெரியும் என்று கொச்சியில் கூட்டம் ஒன்றில் பேசும் போது கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.

“இங்கு வகுப்புவாத விஷம் பரப்பிய ஒருவர் (பிசி ஜார்ஜ்) மீது நடவடிக்கை எடுக்கப்பட்டபோது, ​​அவரைப் பாதுகாக்கும் முயற்ச்சியில் இறங்கிய பாஜக ஏதோ அவரை காப்பாற்ற முயற்சி எடுப்பது அனைத்து கிறிஸ்தவர்களையும் பாதுகாக்க எடுக்கும் நடவடிக்கை போல கட்டமைக்க முயற்சிக்கிறது. வகுப்புவாத விஷத்தைப் பரப்பும் அவர் (பிசி ஜார்ஜ்) ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங்க பரிவாரத்தின் மொழியில் பேச கூடியவராக உள்ளார். மதச்சார்பின்மையைக் குழிதோண்டிப் புதைத்து, வகுப்புவாதத்துக்கு உரமிடும் வகையில் அவரது (பிசி ஜார்ஜ்) பேச்சு உள்ளது. வகுப்புவாத நிலைப்பாட்டை ஆதரிப்பதால் தான் அவருக்கு ஆதரவாக கோஷம் எழுப்ப சங்பரிவாரம் முன் வந்துள்ளது” என்று விஜயன் மேலும் கூறினார்.

வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசியதற்காக கேரள முன்னாள் எம்எல்ஏ பிசி ஜார்ஜ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் கேரள போலீஸார் புதன்கிழமை அவரை கைது செய்தனர்.

நம் நாட்டில் ஆர்எஸ்எஸ் மற்றும் சங்பரிவாரால் வேட்டையாடப்படும் மத சிறுபான்மையினரில் கிறிஸ்தவமும் ஒன்று என்றார் கேரள முதல்வர்.

“..அந்த வேட்டை இன்னும் தொடர்கிறது. நம் நாடு மட்டுமல்ல உலகம் முழுவதுமே அதிர்ச்சிக்கு உள்ளானது. ஒரிசாவில் கிரஹாம் ஸ்டெயின்ஸ் மற்றும் அவரது இரண்டு குழந்தைகளை எரித்ததை நாங்கள் மறக்கவில்லை. இந்த நாடு சிறுபான்மையினருக்கு எதிராக கொடூரமாக வன்முறை செய்கிறது என்று அன்று உலகம் நினைத்தது. ” என விஜயன் மேலும் கூறினார்.

“1998ல் குஜராத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக சங்பரிவார் கலவரத்தை கட்டவிழ்த்து விட்டது. ஆட்சிக்கு வந்த பா.ஜ.க அரசும் அதை பின்பற்றியது. பல வழிபாட்டு தலங்கள், பள்ளி கட்டிடங்கள் பஜ்ரங்தளத்தால் அழிக்கப்பட்டன. 2008ல் ஒடிசாவில் பரவலான கலவரங்கள் நடந்தன. அப்போது. கிறிஸ்தவர்களின் பாதுகாப்பிற்காக இப்போது வகுப்புவாத விஷத்தை கக்குகிறவனை காக்கிறோம் என்று சொன்னவர்கள் 38 உயிர்களை பலிவாங்கினார்கள்.இன்று வரை அவர்களுக்கு அதில் எந்த குற்ற உணர்ச்சியும் இல்லை.மேலும் அங்கு நாற்பதுக்கும் மேற்பட்ட பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டார்கள்.

300க்கும் மேற்பட்ட தேவாலயங்கள் இடிக்கப்பட்டன. பலர் அச்சுறுத்தப்பட்டு மதமாற்றம் செய்யப்பட்டனர். பிரார்த்தனை செய்ய இடமில்லாத மக்களுக்கு CPIM அலுவலகம் திறக்கப்பட்டது. கர்நாடகாவிலும் வன்முறை வெடிக்கிறது. இந்தத் தாக்குதலை ஸ்ரீராம் சேனா மற்றும் பஜ்ரங் தளம் நடத்தியது. 2014-ல் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகும் வன்முறை தொடர்ந்தது. 2015-ல் டெல்லியில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக சங்பரிவாரம் பரவலாக வன்முறையை நடத்தியது. பல கிறிஸ்தவ வழிபாட்டுத் தலங்கள் தாக்கப்பட்டன” என்று கேரள முதல்வர் கூறினார்.

நாடு முழுவதும் கிறிஸ்தவ மக்கள் மீது சங்பரிவார் அமைப்பினர் தாக்குதல் நடத்துகிறார்கள். கேரளாவில் அவர்களைப் பாதுகாப்பது போன்று பாஜகவினர் நடிக்கிறார்கள் என்று முதல்வர் பினராயி விஜயன் கடுமையாகச் சாடினார்.

இதே போல முன்னதாக 2022 ஜனவரி மாதத்தில் பாலக்காடு மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கமிட்டி சார்பில் நடந்த கூட்டத்தில் முதல்வர் பினராயி விஜயன் பங்கேற்றார்.

அப்போது அவர் பேசியதாவது:

“கேரளாவில் வலிமையான சமத்துவ சமுதாயம் இருக்கிறது. இதுபோன்ற தாக்குதல்களை இங்கு நிகழ்த்த முடியாது. வெறுப்பு சம்பவங்கள் இங்கு நடக்கவும் விடமாட்டோம். பாஜகவுக்கு மாற்று இருக்கிறது என்பதை கேரளா நிரூபித்துள்ளது.

சங்பரிவார் அமைப்பின் வகுப்புவாத சித்தாந்தங்களுக்கு மாற்றாக நாட்டு மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். பாஜகவின் வகுப்புவாத திட்டத்தை எதிர்க்க தேசத்துக்கு வலுவான சித்தாந்தம் தேவை. அந்த வலுவான சித்தாந்தம் இடதுசாரிக் கட்சிகளுக்கு மட்டுமே உண்டு.

கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது, நாடு முழுவதும் கிறிஸ்தவ சமுதாயத்தினருக்கு எதிராக சங்பரிவார் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். கடந்த டிசம்பர் 24-ம் தேதி ஆக்ராவில் சான்ட்டா கிளாஸ் உருவ பொம்மை எரிக்கப்பட்டது. வாரணாசியில் கிறிஸ்தவ மிஷன் மருத்துவமனை பண்டிகையைக் கொண்டாடிய நேரத்தில் அவர்களுக்குத் தொந்தரவாக ஜெய் ஸ்ரீராம் கோஷத்தை எழுப்பி, மதமாற்றத்துக்கு எதிராக கோஷமிட்டனர். உத்தரப் பிரதேசத்தில் இதுபோன்று பல சம்பவங்கள் நடந்துள்ளன.

ஹரியாணாவில் அம்பாலாவிலும் இதுபோன்று கிறிஸ்தவ மக்களுக்கு எதிராகத் தாக்குதல் நடந்தது. குருஷேத்ராவில் தேவாலயத்துக்குள் நுழைந்து கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியைத் தடுத்துள்ளனர், இந்து மத பக்திப் பாடல்களைப் பாடியுள்ளனர். குருகிராமில், கிறிஸ்துமஸ் பண்டிகைக் கொண்டாட்டத்துக்குள் சங்பரிவார் அமைப்புகள் நுழைந்து இடையூறு செய்துள்ளன.

மிகப்பெரிய அளவில் மதமாற்றம் செய்வதாக கிறிஸ்தவ சமூகத்தின் மீது சங்பரிவார் அமைப்பினர் குற்றம் சாட்டுகிறார்கள். 75 ஆண்டுகளாக, நாம் சுதந்திரம் பெற்றதிலிருந்து கிறிஸ்தவ சமுதாயத்தின் சதவீதம் 2.3 சதவீதம் மட்டும்தானே இருக்கிறது. எவ்வாறு அவர்கள் மக்களைக் கூட்டம் கூட்டமாக மதமாற்றம் செய்திருக்க முடியும்?

மருத்துவச் சேவை, கல்விச் சேவை, தொண்டுப் பணிகளில் ஈடுபடும் கிறிஸ்தவ அமைப்பினர், மிகப்பெரிய அளவில் மதமாற்றம் இத்தனை ஆண்டுகளில் செய்திருந்தால், அவர்களின் மக்கள் தொகை அதிகரித்திருக்க வேண்டும்தானே”.

இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்தார்.