BJP Intellectual Politicians

கேரளா: நான் பாஜக வை சேர்ந்தவன் கூட இல்லை ; என்னை வேட்பாளராக அறிவித்துள்ளனர்- மணிகண்டன் அதிர்ச்சி !

சுல்தான் பத்தேரி: இன்னும் மூன்று வாரங்களில் நடைபெறவுள்ள கேரள சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க பாரதீய ஜனதா கட்சி வயநாடு மாவட்டத்தில் கடும் தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளதாக தெரிகிறது. 115 தொகுதிகளுக்கான பட்டியலை பாஜக ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டபோதும், வயநாட்டில் உள்ள மூன்று தொகுதிகளில் இரண்டில் இன்னும் பொருத்தமான வேட்பாளர்களைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகிறது. இந்நிலையில், மனந்தவாடி தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சி.மணிகண்டன், போட்டியிட மறுத்துள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து கேரள ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.

வேட்பாளர் அதிர்ச்சி:

ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறும் தேர்தலுக்காக இந்தத் தொகுதியில் இருந்து பாஜக வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதை அறிந்த, பனியா சமூகத்தைச் சேர்ந்த மணிகண்டன் கடும் அதிர்ச்சியடைந்தார்.

பாஜக மனந்தாவடி தொகுதி வேட்பாளர் பெயரை பாஜக ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது. ​​அதில் மணிகுட்டன் (மணிகண்டனின் பேஸ்புக் சுயவிவரத்தில் காணப்படும் பெயர்) என்ற பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது.

என்ன விட்டுடுங்க, வேட்பாளர் எஸ்கேப் :

அதை மணிகண்டன் இது வேறு யாரையோ குறிக்கிறது என கருதி உள்ளார். உண்மையில் அவர் பெயர் தான் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது தெரிந்ததும், அவர் தேர்தலில் பாஜக சீட்டில் போட்டியிட போவது இல்லை என்று மணிகண்டன் உடனடியாக தெளிவுபடுத்தி உள்ளார். மேலும் பாஜக வேட்பாளராக இருக்க வேண்டாம் என அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரும் அறிவுறுத்தி உள்ளனர்.

பாஜக உறுப்பினரும் இல்லை:

மணிகண்டன் உண்மையில் பாஜக வை சேர்ந்தவராக கூட இல்லை, தேர்தலில் போட்டியிட எந்த திட்டமும் இல்லை என்கிறார்.

மனந்தவாடி தொகுதி பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக மாவட்ட பொதுச் செயலாளர் உட்பட ஒரு முக்கிய உள்ளூர் தலைவரை களமிறக்க திட்டம் தீட்டப்பட்டிருந்தது.

பரிதாப நிலை:

மணிகண்டன் வெளியேறியதால், வயநாட்டில் உள்ள மூன்று தொகுதிகளில் இரண்டில் பாஜகவுக்கு வேட்பாளர்கள் இல்லை. பத்தேரி தொகுதிக்கும் வேட்பாளர் பெயர் வெளியிடப்படவில்லை. கல்பேட்டா இடத்திற்கு மட்டுமே ஒரு வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.