Kashmir

உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்குமாறு காஷ்மீர் பிரஸ் க்ளப் மோடி அரசுக்கு வேண்டுகோள்…

எங்கள் ஊடக உறுப்பினர்களுக்கு இணைய சேவை தொடர்ந்து மறுக்கப்பட்டு வருவது “பத்திரிகை சுதந்திரத்தின் குரல்வளையை நெரிக்க மேற்கொள்ளப்படும் ஒரு திட்டமிடபட்ட முயற்சி” என்று சுமார் 250 ஊடகவியலாளர்களைக் கொண்ட காஷ்மீர் பிரஸ் கிளப் (கேபிசி) குற்றம்சாட்டியுள்ளது.

அரசாங்கத்திற்கு நினைவூட்டல் :

“பத்திரிகை சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமையான இணைய சேவையை உறுதி செய்வது ஒரு அரசாங்கத்தின் கடமை என்பதை நாங்கள் மீண்டும் அரசாங்கத்திற்கு நினைவூட்டுகிறோம். உச்சநீதிமன்றம் சட்டப் பிரிவு 19 (10) (ஏ) இன் ஒருங்கிணைந்த பகுதியாக இணைய சேவையை அறிவித்துள்ளது” என்று கேபிசி செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

https://twitter.com/standwkashmir/status/1222205037688119298

அரசியலமைப்பு சாசனத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்ட உரிமையாக இணையசேவை குறித்து சமீபத்திய உச்சநீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய கேபிசி, காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள ஊடக வர்க்கத்தினருக்கு இந்த உரிமை கிடைக்கப்பெறுவதை உறுதி செய்யும் விஷயத்தில் அரசாங்கம் எந்த முன்னேற்றதையும் செய்திடவில்லை என்று கேபிசி சார்பில் தெரிவிக்கபட்டுள்ளது.

1 நாள் 2 நாட்கள் அல்ல 177 நாட்கள்:

இணையசேவை முடக்கம் செய்யப்பட்டு நேற்றோடு 177 நாட்கள் ஆகியுள்ள நிலையில் இன்னமும் கூட இணையசேவை கிடைக்கப்பெற செய்யும் விதத்தில் இணைய சேவை வழங்குநர்களுக்கு (ISP ‘s ) உரிய வழிகாட்டுதல்கள் கொண்ட அறிவிப்பு அனுப்பப்படவில்லை. இதிலிருந்தே அரசாங்கம், மீடியா குழுமங்கள் மற்றும் ஊடகவியலாளர்களை தனிமைப்படுத்துகிறது என்பது தெளிவாகிறது, என்றார் காஷ்மீர் பத்திரிகைக் கழகத்தின் செய்தித் தொடர்பாளர்.

301 இணையதளங்களை மட்டுமே உபயோகிக்க அனுமதி:

மொத்தம் 301 இணையதளங்களை மட்டுமே உபயோகிக்க அனுமதிக்கப்பட்டுள்ளோம். இதில் சர்வதேச ஊடகங்கள், இந்திய ஊடகங்கள் என எதுவும் அடங்காது. எதன் அடிப்படையில் இந்த 301 இணையதளங்களை மட்டும் தேர்வு செய்தார்கள் என்றே தெரியவில்லை.

அதே போல தனிமனித சுதந்திரத்திற்கு எதிரான நிபந்தனைகளை அடங்கிய எழுத்துபூர்வ ஒப்புதலை வழங்குமாறு இணைய சேவை வழங்குநர்கள் (ISP ‘s ) கோருவதாகவும் குற்றசாட்டியுள்ளனர் பிரஸ் க்ளப் உறுப்பினர்கள். முகநூல், ட்விட்டர் போன்ற எந்த ஒரு சமூகவலைத்தளங்களும் இந்த 301ன் பட்டியலில் அடங்காது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் காஷ்மீரில் எங்குமே (fixed line broadband Internet) ப்ராட்பாண்ட் சேவை வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.