BJP Karnataka

பிராமண பிரதிநிதிகள் கோரிக்கையை ஏற்று ஆறாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் 2 பக்கங்கள் நீக்கம்!

கர்நாடகாவில் ஆறாம் வகுப்பு சமூகவியல் பாடப் புத்தகத்தில் இருந்து இரண்டு பக்கங்களை பாடத் திட்டத்தில் இருந்து நீக்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

அப்படி என்ன இருக்கிறது 2 பக்கங்களில்?

‘மதங்களின் பிறப்பு’ என்ற தலைப்பில் அமைந்த அந்த அத்தியாயத்தில் வேதகால சடங்குகளில் விலங்குகள் பலியிடப்பட்டது குறித்தும் மத வழிபாடுகளுக்கு பயன்படுத்தப்பட்ட சமஸ்கிருத மொழியைப் படிக்கும் வாய்ப்பு பெரும்பாலான மக்களுக்கு கிடைக்காமல் இருந்திருக்கிறது பற்றியும் விவரணைகள் இருந்தன. இந்தப் பக்கங்களை இனிமேல் மாணவர்களுக்கு பாடம் எடுக்கக் கூடாது என்று அந்த அரசாணை குறிப்பிடுகிறது.

பிராமணர்கள் பிரதிநிதிகள் குழு ஒன்று முதல்வருக்கு அனுப்பிய புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிகிறது. அந்தப் பக்கத்தில் இருந்த விபரங்கள் தங்கள் மனதை புண்படுத்துவதாக அவர்கள் குறிப்பிட்டு இருந்தனர்.

வரலாற்றை மாற்றுவது தகுமா?:

பண்டைய வரலாற்றில் ‘புண்படுத்தப்பட’ என்ன இருக்க முடியும்? அந்தப் பாடப்புத்தகத்தில் உள்ள விபரங்கள் வரலாற்று ரீதியாக தவறு என்று சொல்லி நீக்க சொல்ல வேண்டும். அப்படி எனில் அதனை கல்வியாளர்கள் மற்றும் வரலாற்று நிபுணர்கள் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும். இந்த ‘புண்பட்ட’ குழு வேதத்தில் இருந்தும் பிராமணங்களில் (வேதங்களுக்கு எழுதப்பட்ட உரைகள்) இருந்தும் குறிப்புகளை அந்த நிபுணர்களிடம் கொடுத்து தங்கள் நிலைப்பாட்டை நிரூபிக்க வேண்டும். அதை விடுத்து சும்மா அரசாணையில் வரலாற்றை மாற்றுவது என்பது ஆச்சரியமான அணுகுமுறை.

வேத சடங்குகள்

வேத சடங்குகள் முழுக்க விலங்குகள் பலியிடுதல் குறித்துத்தான் இருந்திருக்கின்றன. வேத காலங்களில் பரவலான விலங்கு பலிகள் நடைமுறையில் இருந்திருக்கின்றன. ராமாயாணம் மற்றும் மகாபாரதத்தில் கூட விலங்குகள் பலியிடுதல் குறித்த தொடர் குறிப்புகள் இருக்கின்றன. பசு குறித்த சிந்தனைகள் மட்டும் வேத காலத்துக்குப் பின் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றத்தை சந்தித்து வந்தது. (வேத காலத்தில் பசு பலியிடுதல், அதன் இறைச்சியை உண்ணுதல் போன்றவை கூட பரவலாக இருந்திருக்கின்றன.) புத்த மதத்தின் செல்வாக்கினாலும், அல்லது அதற்கு ஈடு கொடுக்கும் வகையிலும்தான் வேதிய சடங்குகள் மாற்றத்துக்கு உள்ளாகின. கொஞ்சம் கொஞ்சமாக வைதீக சம்பிரதாயங்களில் அகிம்சை குறித்த மாற்றங்கள் தெரிய வந்தன. Indologists எனப்படும் பண்டைய இந்திய மத, சமூகவியல் ஆய்வாளர்களின் ஒட்டுமொத்தமான நிலைப்பாடும் இதுதான்.

சுத்திகரிக்கப்பட்ட வரலாறு?!

இப்போது வேத கால வரலாற்றை ‘சுத்திகரித்து’ விட்டால் அகிம்சை குறித்த சிந்தனாவாதங்களை இந்து மதத்தில் இருந்துதான் பௌத்தம் இரவல் வாங்கியது என்று அர்த்தம் ஆகி விடும். அடுத்ததாக தலித்துகள், சூத்திர சமூகங்கள் சம்பந்தமாக பண்டைய இலக்கியங்களில் உள்ள குறிப்புகளை ‘திருத்தி எழுதலாம். பிரமாண சமூகம் செய்த அக்கிரமங்கள் குறித்த விஷயங்களை திருத்தி விடலாம். ராமாயணம், மகாபாரதம் போன்ற காவியங்களில் உள்ள சங்கடகரமான பகுதிகளை நீக்கி சுத்தப்படுத்தி விடலாம். உலகிலேயே மிகவும் புனிதமான மதம் இந்து மதம்தான் என்று பின்னர் கட்டமைத்து விடலாம்.

வரலாற்று திருத்தமா அல்லது அழிப்பா?:

வரலாற்றை ‘திருத்தி’ எழுதுவது என்றால் இதுதான்: தங்களுக்கு சங்கடமான வரலாறுகளை ‘அழித்து விடுவது’. தங்கள் மதம் பற்றிய பொய்யான தகவல்களை மூளைகளில் திணிப்பது. வரும் கால தலைமுறைக்கு பண்டைய கால சமூகங்கள் குறித்த சுத்தமாக கழுவி, துடைத்து விடப்பட்ட ஒரு பிம்பத்தை கட்டமைப்பது. அதன் மூலம் தங்கள் மதம் குறித்து தாங்களே உருவாக்கிய மாய புனிதத் தன்மையை கட்டிக் காத்துக் கொள்வது.

இந்து மதம் குறித்தும், அதன் தோற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சி குறித்தும் ஒரு மண்ணும் தெரியாத குழுக்கள் இந்தியாவில் பல இருக்கின்றன. அவற்றில் முதன்மையான குழு இந்துத்துவர்கள்தான். அந்த அறியாமையை ஆபத்தான திசையில் கொண்டு போவதிலும் முதலிடத்தில் இருப்பது இந்தக் குழுதான்.

ஆக்கம்: அரவிந்த்.