Karnataka Muslims

கர்நாடகா: தலையில் தொப்பி அணிந்ததற்காக முஸ்லீம் மாணவரை தாக்கிய போலீசார்; பள்ளியில் அனுமதிக்க மறுத்த முதல்வர் !

பாகல்கோட்: கர்நாடகாவில் கல்லூரி வளாகத்தில் தலையில் தொப்பை அணிந்ததற்காக மாணவர் ஒருவரைத் தாக்கியதாகக் கூறி முதல்வர், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 5 பேர் உட்பட 7 பேர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

உள்ளூர் பனஹட்டி ஜே.எம்.எஃப்.சி நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, மாநிலத்தின் பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள தெரடாலா காவல் நிலையத்தால் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நவீத் ஹசன் சாப் தரதாரி என்ற கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

நடந்த சம்பவம்:

இந்த சம்பவம் 2022, பிப்ரவரி 18 அன்று நடந்துள்ளது. தாராதாரி தனது மனுவில், தான் தலையில் தொப்பி அணிந்து கல்லூரிக்கு சென்றதாகவும், ஆனால் கல்லூரியின் முதல்வர் தன்னை உள்ளே அனுமதிக்க மறுத்ததாகவும் பாதிக்கப்பட்ட மாணவர் மனுவில் தெரிவித்துள்ளார். “கல்லூரிக்குள் தொப்பி பயன்படுத்துவதை கட்டுப்படுத்தும் அரசாணை எதுவும் இல்லை” என்றிருந்தும் தான் அனுமதிக்கபடவில்லை என்கிறார் மாணவர்.. மேலும் போலீசார் தன்னைத் தாக்கியதாகவும், தன் இஸ்லாமிய நம்பிக்கையை அவமதித்ததாகவும் மாணவர் தனது மனுவில் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

தனது மதத்தை அவமதித்து, கல்லூரியில் இருந்து தன்னைப் புறக்கணித்த முதல்வர் மற்றும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய, அவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

நீதிமன்றம் உத்தரவு:

இந்த மனுவை பரிசீலித்த நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டது.

இந்த வழக்கை ஜூன் 30-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் நீதிமன்றம், ஜமகண்டி துணை எஸ்பியை வழக்கின் ஆய்வாளராக நியமித்துள்ளது.

முன்னதாக, பாதிக்கப்பட்ட மாணவர் நவீத் மற்றும் அவரது தந்தை மீது புஜாரா காவல் நிலையத்தில் கல்லூரி முதல்வர் ஏ.எஸ். புஜாரா புகார் அளித்தார், அவர்கள் தன்னைத் தாக்கியதாகவும், தனது கடமையைச் செய்யவிடாமல் தடுத்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார் புஜாரா.

தலையில் தொப்பி அணிய கூடாது என்றால் கூட, அறிவுரை சொல்லாமல் மாணவர் மீது தாக்குதல் நடத்துவது சரியா ? என்பதை நாம் கவனிக்க கடமைப்பட்டுள்ளோம்.

மீண்டும் ஹிஜாப் விவகாரம்:

இதற்கிடையில், மங்களூருவில் ஹிஜாப் விவகாரம் மீண்டும் தலைதூக்கிய நிலையில், உயர்நீதிமன்றம் மற்றும் அரசின் உத்தரவுகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்று கர்நாடக பாஜக முதல்வர் பசவராஜ் பொம்மை சனிக்கிழமை வலியுறுத்தினார். மங்களூர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சிண்டிகேட் கூட்டத்திற்குப் பிறகு இந்தப் பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளதாகக் கூறிய அவர், மாணவர்கள் இதுபோன்ற பிரச்சினைகளில் ஈடுபடாமல் கல்வியில் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொண்டார்.

மீண்டும் ஹிஜாப் சர்ச்சையை உருவாக்க வேண்டிய அவசியம் இல்லை, நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது, அனைவரும் நீதிமன்றத்தையும், அரசின் உத்தரவையும் கடைப்பிடிக்க வேண்டும் என்று பொம்மை தெரிவித்தார்.

நீதிமன்றம் புறக்கணிப்பு:

மங்களூருவில் உள்ள பல்கலைக்கழகக் கல்லூரி மாணவர்கள் சிலர் முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்புகளுக்குச் செல்வதாகக் கூறி கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை போராட்டம் நடத்தியதால் ஹிஜாப் விவகாரம் மீண்டும் ஒருமுறை தலைதூக்கி உள்ளது. வகுப்பறைக்குள் ஹிஜாப் அணிய அனுமதி கோரி முஸ்லிம் மாணவர்கள் குழு தாக்கல் செய்த மனுக்களை கர்நாடக உயர் நீதிமன்றம் மார்ச் 15 அன்று தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.