Hijab Row Karnataka

கர்நாடகா: ஹிஜாப் அணிவது இஸ்லாத்தில் கட்டாயமில்லை என கூறி பள்ளிகளில் ஹிஜாப் அணிய தடை விதித்தது நீதிமன்றம்!

ஹிஜாப் அணிவதற்கான தடையை எதிர்த்துப் போராடிய மாணவர்களுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்த தடையை எதிர்த்து ஐந்து மனுக்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அனைத்து மனுக்களும் தற்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

ஹிஜாப் அணிவது இஸ்லாமிய மார்க்கத்தில் கட்டாயமில்லை என மூன்று பேர் அடங்கிய நீதிமன்ற பென்ச் தீர்ப்பு வழங்கியுள்ளது.

‘பள்ளி சீருடை அணிவதற்கான கட்டுப்பாடு, மாணவர்கள் எதிர்க்க முடியாத நியாயமான கட்டுப்பாடு’ என்று உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

இந்த உத்தரவுக்கு முன்னதாக, மாநில தலைநகர் பெங்களூருவில் “பொது அமைதி மற்றும் ஒழுங்கை பராமரிக்க” ஒரு வாரத்திற்கு பெரிய கூட்டங்களுக்கு மாநில அரசு தடை விதித்தது. மங்களூரிலும் மார்ச் 15 முதல் 19 வரை பெரிய அளவில் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உடுப்பியில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைவர்கள் கருத்து:

நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன். உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று அனைவரும் அமைதி காக்க வேண்டும், மாநிலமும் நாடும் முன்னேற வேண்டும் என்று அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். மாணவர்களின் அடிப்படை வேலை படிப்பதுதான். எனவே இதையெல்லாம் விட்டுவிட்டு அவர்கள் படித்து ஒற்றுமையாக இருக்க வேண்டும்” என மத்திய பாஜக அமைச்சர் பிரகலாத் ஜோஷி கருத்து தெரிவித்துள்ளார்.

கர்நாடக பாஜக முதல்வர் பொம்மை, “அமைதியும் நல்லிணக்கமும் பேணப்பட வேண்டும். தீர்ப்பை ஏற்குமாறு அனைத்து அதிகாரிகளுக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன்” என கருத்து தெரிவித்துள்ளார்.

‘தயவு செய்து இப்போது வகுப்புக்குத் திரும்புங்கள்’ என்று பாஜக செய்தித் தொடர்பாளர் மாளவிகா அவினாஷ் கூறியுள்ளார்.

உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு பதிலளித்த மெகபூபா முப்தி, “கர்நாடக உயர்நீதிமன்றத்தின் ஹிஜாப் தடையை நிலைநாட்டும் முடிவு மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. ஒருபுறம் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது பற்றி பேசினாலும், மறுபுறம் பெண்ணின் ஒரு சாதாரண (ஆடையை) தேர்ந்தெடுக்கும் உரிமையை மறுத்து வருகிறோம். இது மதத்தை பற்றிய ஒன்றில்லை, பெண் தான் விரும்பியதை தேர்ந்தெடுக்கும் உரிமையை பற்றியதாகும்.” என கருத்து தெரிவித்துள்ளார்.

கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. ஹிஜாப் பற்றி நீங்கள் என்ன நினைத்தாலும், ஹிஜாப் எனும் ஆடையையும் தாண்டி , அது ஒரு பெண்ணின் உரிமையைப் பற்றியது, தான் எப்படி உடை அணிய வேண்டும் என்பதைத் தேர்வுசெய்யும் உரிமையைப் பற்றியது. இந்த அடிப்படை உரிமையை நீதிமன்றம் நிலைநாட்டவில்லை என்பது கேலிக்கூத்தாக உள்ளது.” என உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

எந்தவொரு மத நம்பிக்கையிலும் இது அத்தியாவசியமானது, இது அத்தியாவசியமற்றது என விளக்குவது நீதிமன்றத்தின் வேலை என்று நாங்கள் நம்பவில்லை. மாநில அரசின் உத்தரவை உறுதிப்படுத்தியுள்ள நீதிமன்ற தீர்ப்பால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து முஸ்லிம் பெண் மாணவிகளுடன் நாங்கள் நிற்கிறோம். சாத்தியமான தீர்வுகள் குறித்து நாங்கள் தற்போது சட்ட ஆலோசனையில் ஈடுபட்டுள்ளோம் என இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பின் தேசிய தலைவர் முகமது அகமது அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மனுதாரர்கள் தற்போது உச்ச நீதிமன்றத்தை நாட உள்ளனர்.

வக்கீல் ஷாகுல் கூறுகையில், “தீர்ப்பு குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம். விரிவான நீதிமன்ற ஆர்டர் வந்த பின், அதை ஆய்வு செய்து, சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம்,” என்றார்.

மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல் கே.வி.தனஞ்சய், ‘உயர் நீதிமன்றத்தின் முழு உத்தரவுக்கு பிறகு உச்சநீதிமன்றத்தை நாடுவோம்’ என்றார்.