Hate Speech Islamophobia Muslims Uttar Pradesh

நபிகள் நாயகத்தை குறித்து அவதூறாக பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூடியவர்கள் மீது உபி போலீசார் வழக்கு பதிவு !

உபி: சமூக வலைதளங்களில் பயங்கரவாதியாக விமர்சிக்கப்படும் நரசிங்கானந்த் சரஸ்வதி நபிகள் நாயகத்திற்கு எதிராக அவதூறாக பேசியதற்கு ஜனநாயக ரீதியாக, அமைதியான முறையில் எதிர்ப்பை தெரிவித்த100 க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் மீது உத்தரபிரதேசத்தின் பிலிபிட் காவல்துறை வழக்கு பதிவு செய்ததாக பிரசித்திமிக்க உருது செய்தித்தாள் இன்குலாப் தெரிவித்துள்ளது.

விதி மீறல் என குற்றச்சாட்டு:

போராட்டக்காரர்கள் கொரோனா கால சமூக இடைவெளியை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர் மேலும் பஞ்சாயத்து தேர்தல் காரணமாக இப்பகுதியில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். போலீஸ் கான்ஸ்டபிள் ராஜீவ் சவுகான் அளித்த புகாரின் அடிப்படையில் ஐபிசி 188 மற்றும் 269 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

https://twitter.com/Newscap_in/status/1373301141451108356

கண்டனம்:

சுன்னி உலமா கவுன்சில் பொதுச் செயலாளர் ஹபீஸ் நூர் அஹ்மத் அஸ்ஹாரி போலீசாரின் இந்நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.தேர்தல்கள் காரணமாக உள்ளூர் தொகுதி மேம்பாட்டு அலுவலகத்திற்கு வெளியே பெரிய கூட்டங்கள் காணப்படுகின்றன, ஆனால் காவல்துறையினரின் கண்களுக்கு இதுவெல்லாம் தெரிவதில்லை என்று அவர் கூறினார்.

“இருப்பினும், ஒரு பயங்கரவாதிக்கு [சரஸ்வதி] எதிராக நடவடிக்கை எடுக்குமாறு அமைதியாகக் கோருவதற்காக வீடுகளில் இருந்து வெளியே வந்த முஸ்லிம்களின் கூட்டம் மட்டும் அவர்களின் கண்களில் படுகிறது.” என்று அவர் மேலும் கூறினார்.

போலிஸ் நடவடிக்கைக்கு சட்டரீதியான மற்றும் ஜனநாயக முறையில் பதிலளிப்போம் என்று அவர் மேலும் கூறினார்.

பயங்கரவாத சாமியார்?:

காசியாபாத்தில் உள்ள தஸ்னா தேவி கோயிலுக்குத் தலைமை தாங்கும் சரஸ்வதி, இந்திய பத்திரிகைக் கழகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் நபிகள் நாயகத்திற்கு எதிராக மோசமான மொழியைப் பயன்படுத்தினார். இவ்வாறு முஹம்மத் நபியை இழிவுபடுத்தி அவதூறாக பேசுவதை வாடிக்கையாக கொண்ட இவர், முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையை தூண்டும் வண்ணம் தொடர்ந்து பேசி வருபவர் என்ற குற்றச்சாட்டும் இவர் மீது உள்ளது. இவரின் வன்முறை பேச்சுக்கள் இன்றளவும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

முஸ்லிம்களின் பலத்த எதிர்ப்பை தொடர்ந்து தில்லி காவல்துறை அவருக்கு எதிராக ஐபிசியின் 153-ஏ & 295-ஏ பிரிவுகளின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தது. மற்ற மாநிலங்களில் உள்ள பல காவல் நிலையங்களிலும் அதிகமான எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.