Goa Intellectual Politicians

‘மனிதர்களை போலவே புலிகளும் மாடுகளை சாப்பிட்டால் தண்டிக்கப்பட வேண்டும்’ – கோவா எம்எல்ஏ கருத்து ..

மனிதர்கள் மாட்டிறைச்சியை சாப்பிட்டால் தண்டிக்கப்படும் போது புலிகளும் மாடுகளை சாப்பிட்டால் தண்டிக்கப்பட வேண்டும் என கோவாவில் புலிகள் கொல்லப்படுவது குறித்த சட்டசபை விவாதத்தின் போது என்.சி.பி எம்.எல்.ஏ சர்ச்சில் அலெமாவோ தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மாதம் மகாதாய் வனவிலங்கு சரணாலயத்தில் ஐந்து உள்ளூர் வாசிகளால் ஒரு தாய் புலியும் அதன் மூன்று குட்டிகளும் கொல்லப்பட்டன.

புதன்கிழமை நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத் தொடரின்போது கவனத்தை ஈர்க்கும் தீர்மானத்தின் வாயிலாக எதிர்க்கட்சித் தலைவர் திகம்பர் காமத் இந்த விவகாரத்தை எழுப்பினார்.

அப்போது “புலி ஒரு மாட்டை சாப்பிடும்போது அதற்கு என்ன தண்டனை வழங்கப்படுகிறது? ஒரு மனிதன் மாட்டை சாப்பிடும்போது, அவன் தண்டிக்கப்படுகிறான். வனவிலங்குகளைப் பொருத்தவரை, புலிகள் முக்கியமானவை தான், ஆனால் மனிதர்களைப் பொருத்தவரை, மாடுகள் முக்கியமானவை. எனவே இந்த விவகாரத்தில் மனித கோணத்தை முற்றிலுமாக புறக்கணித்து விட முடியாது ” என்று அலெமாவோ பேசினார்.

நான் ஒரு முக்கியமான விஷயம் குறித்து பேசி கொண்டிருக்கிறேன் எனவே என்னை பார்த்து சிரிக்காதீர்கள் என்று சக எம்எல்ஏ களுக்கு, பேச்சின் நடுவில் கோரிக்கை வைத்தார்.

பிறகு கவன தீர்மானத்திற்கு பதிலளித்த முதலமைச்சர் பிரமோத் சாவந்த், புலிகள் தங்கள் கால்நடைகளைத் தாக்கியதால் உள்ளூர்வாசிகள் புலிகளைக் கொன்றதாகக் தெரிவித்தார்.

புலிகளால் கால்நடைகளை இழந்த விவசாயிகளுக்கு மூன்று அல்லது நான்கு நாட்களுக்குள் இழப்பீடு வழங்கப்படும் என்றார் பிரமோத் சாவந்த்.