Muslims Uttar Pradesh

தாஜ்மஹால் வளாக பள்ளிவாசலில் தொழுததற்காக 4 பேர் கைது செய்து சிறையில் அடைப்பு!

ஆக்ரா: தாஜ்மஹால் வளாகத்தில் உள்ள ஷாஹி மசூதியில் தொழுகை நடத்தியதற்காக நான்கு பேர் மே 25 புதன்கிழமை கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேர் மீதும் இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பிரிவு 153 (கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் வேண்டுமென்றே தூண்டுதல் நடவடிக்கையில் ஈடுபடுவது) இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. புதன்கிழமை மாலை 7 மணியளவில் ஷாஹி மசூதியில் அவர்கள் தொழுகை நடத்தி உள்ளனர்.

இதுகுறித்து மாநகர காவல் கண்காணிப்பாளர் கூறியதாவது:

“புதன்கிழமை தாஜ்மஹால் வளாகத்தில் உள்ள மசூதியில் தொழுகை நடத்தியதற்காக நான்கு சுற்றுலாப் பயணிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 3 பேர் ஹைதராபாத் மற்றும் ஒருவர் அசம்கரை சேர்ந்தவர்கள். அவர்கள் மீது ஐபிசி 153 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்” என்றார்.

ஷாஹி மசூதியில் தொழுகையை தடை செய்யபட்டது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை: அதிகாரி

தாஜ்மஹாலில் உள்ள இன்தஜாமியா கமிட்டியின் தலைவர் இப்ராஹிம் ஜைதி கூறுகையில், ஹைதராபாத்தைச் சேர்ந்த 4 பேர் மசூதியில் தொழுகை நடத்திக் கொண்டிருந்தபோது, ​​அங்கிருந்த அதிகாரிகள் அவர்களை பலவந்தமாக தடுத்து அவர்களை போலீஸாரிடம் ஒப்படைத்தனர், என்றார்.

மேலும் அவர் கூறுகையில், “தாஜ்மஹால் மசூதியில் தொடர்ந்து தொழுகை நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் சமீபத்தில், இந்திய தொல்லியல் துறை (ஏஎஸ்ஐ) தாஜ்மஹாலின் உள்ளே உள்ள மசூதியில் தொழுகை நடத்துவது உச்ச நீதிமன்றத்தின்படி வெள்ளிக்கிழமை தவிர, மற்ற நாட்களில் தடை செய்யப்பட்டுள்ளது என்று கூறியது. ஆனால் அது முற்றிலும் தவறானது. தொழுகை தடைசெய்யப்பட்டுள்ளது என்பதை எழுத்துப்பூர்வமாக எங்களுக்குத் தருமாறும், அதற்கான அறிவிப்புப் பலகையை வைக்குமாறும் எஸ்பி மற்றும் ஏஎஸ்ஐயிடம் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளோம். அவர்கள் அதைச் செய்யவில்லை.”

“குற்றம் சாட்டப்பட்டவர்கள் சுற்றுலாப் பயணிகள் என்பதால், இங்கு என்ன அனுமதிக்கப்படுகிறது, எது அனுமதிக்கப்படவில்லை என்பது அவர்களுக்குத் தெரியாது. நேரங்கள் குறித்த தெளிவான வழிமுறைகள் இருந்தால், மக்கள் விதிகளுக்குக் கட்டுப்படுவார்கள், ”என்று அவர் மேலும் கூறினார்.

மசூதியில் தொழுகைக்கு தடை விதிப்பது நியாயமற்றது என்றார். “தொழுகை இங்கு அனுமதிக்கப்படாது என்று அவர்களுக்கும் சரி எங்களுக்கு சரி தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கவில்லை, ஆனாலும் தொழுகை நடத்தினால் தடை விதிப்பார்களாம் !.”

‘சுற்றுலா பயணிகளுக்கு தடை பற்றி தெரியாது’: சுற்றுலா வழிகாட்டி

சுற்றுலாப் பயணிகளின் வழிகாட்டியாக இருந்த லக்னோவில் வசிக்கும் வினய் குமார் தீட்சித் கூறுகையில், தினசரி தொழுகையை தடைசெய்யும் அறிவிப்புகள் எதுவும் காட்சிக்கு வைக்கப்படவில்லை.

“நாங்கள் மசூதியை நோக்கிச் சென்றபோது, ​​மேலும் இரண்டு பேர் தொழுகை செய்வதைக் கண்டோம், எனவே சுற்றுலாப் பயணிகளும் தொழுகையில் ஈடுபட்டனர். ஆனால், சுற்றுலாப் பயணிகள் தாஜ்மஹாலைப் பார்க்க வந்திருந்தனர், அவர்களுக்கு விதிகள் தெரியாது.”என வினய் குமார் கூறினார்

“தாஜ்மஹாலில் இருந்து அவர்கள் வெளியே அழைத்துச் செல்லப்பட்டனர். இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக அவர்கள் அடைத்து வைக்கப்பட்டனர், இன்னமும் கூட அவர்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை, அதிகாரிகள் கூடுதல் விவரங்களைத் தெரிவிக்க மறுக்கிறார்கள்” என்று வினய் குமார் மேலும் கூறினார்.