International News

சீனாவை தொடர்ந்து சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் நோயாளிகள் அதிகரிப்பு ..

சீனாவில் பரவி வரும் கொரோனா வைரசால் இதுவரை 812 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 37,226 பேருக்கு நோய் தோற்று ஏற்பட்டுள்ளதும் உறுதி செய்துள்ளது அந்நாட்டு அரசு. தற்போது சீனாவை தொடர்ந்து அதிக அளவில் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நாடு ஜப்பான், அதற்கு அடுத்த இடத்தில உள்ளது சிங்கப்பூர் என்று தெரியவந்துள்ளது.

இது வரை சிங்கப்பூரில் 33 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அந்நாட்டு அரசு “ஆரஞ் அலர்ட்டை” அறிவித்துள்ளது. வைரஸின் தாக்கம் வலிமையானது , மனிதர்களுக்கு இடையே சுலபமாக பரவ கூடியது என்று எச்சரிப்பதே ஆரஞ் அலர்ட் ஆகும்.

முன்னதாக கடந்த 2003 ஆம் ஆண்டு சார்ஸ் வைரஸின் போதும் 2009 ஆம் ஆண்டு எச் 1 என் 1 இன்ஃப்ளூயன்ஸா நோய் தொற்றின் போதும் அரசாங்கம் இந்த ஆரஞ் அலர்ட்டை அறிவித்திருந்தது.

 Prime Minister Lee Hsien Loong   சிங்கப்பூர் பிரதமர் லீ ஹ்சியன்
சிங்கப்பூர் பிரதமர் லீ ஹ்சியன்

இந்த அரசாங்க அறிவிப்பில் அந்நாட்டு மக்கள் கடும் பீதி அடைந்துள்ளனர். பல்பொருள் அங்காடிகளில் உள்ள இன்ஸ்டன்ட் நூடுல்ஸ், அரிசி, டாய்லட் பேப்பர்ஸ் என அத்தியாவசிய பொருட்கள் விற்று தீர்ந்தன.

அதனை தொடர்ந்து அந்நாட்டு பிரதமர் லீ ஹ்சியன் லூங் மக்கள் பீதி அடைய வேண்டாம். வைரஸை விட கொடுமையானது பயம் தான். எனவே யாரும் அச்சம் கொள்ள வேண்டாம். நகரங்கள் எப்போதும் போல தான் இருக்கும். போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. நகரங்கள் அடைக்கப்பட்டு விடவில்லை. மேலும் மக்கள் அனைவரும் வீடுகளிலேயே அடைந்து கிடக்குமாறும் அரசு மக்களுக்கு அறிவிக்கவில்லை என கூறி இன்று மக்களுக்கு நம்பிக்கை அளித்தார்.

சிங்கப்பூர் விமான கண்காட்சிக்கு பயணிக்கும் தனது தூதுக்குழுவின் அளவை அமெரிக்க அரசு குறைத்து வருகிறது. யு.எஸ். பாதுகாப்பு நிறுவனங்களான லாக்ஹீட் மார்ட்டின் கார்ப் (எல்எம்டி.என்) மற்றும் ரேதியோன் கோ (ஆர்.டி.என்.என்) ஆகியவை தாங்கள் கண்காட்சியில் கலந்து கொள்ள போவதில்லை என அறிவித்துள்ளன.

இதனிடையே சீனாவின் வுகான் நகரத்தில் உள்ள சிங்கப்பூர் நாட்டை சேர்ந்தவர்கள் இன்று சிங்கப்பூருக்கு வரவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.