Kashmir Terrorism

டிஎஸ்பி தவிந்தர் சிங்கிற்கும் பாராளுமன்ற தாக்குதலுக்கும் உள்ள தொடர்பு என்ன?

தீவிரவாதிகளுக்கு உதவி செய்ததாக ஜம்மு & கஷ்மீர் போலீஸ் டிஎஸ்பி தவிந்தர் சிங் எனும் அதிகாரி கைது செய்யப்பட்டு இருக்கிறார். ஹிஜ்புல் முஜாஹிதீனை சேர்ந்த மூன்று பேரை சண்டிகர் கூட்டி வந்து அவர்களுடன் ஊர் சுற்றி இருக்கிறார். அங்கே உள்ள மால்களுக்கு போயிருக்கிறார்கள். அங்கே என்ன செய்ய திட்டமிடப்பட்டு இருந்தது என்பது குறித்து இன்னமும் தகவல் தெரியவில்லை.

நாடாளுமன்ற தாக்குதலில் தவிந்தர் பங்கு :

இதில் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம் நாடாளுமன்ற தாக்குதலில் தவிந்தர் பெயர் அடிபட்டது. அந்த வழக்கில் தூக்கிலிடப்பட்ட அஃப்சல் குரு அவர் வழக்குரைஞருக்கு அப்போது எழுதிய ஒரு கடிதத்தில் தன்னை ஒரு காவல் அதிகாரி அடிக்கடி சித்ரவதை செய்ததாகவும் அதில் இருந்து தப்பிக்க, அவருக்கு நிறைய வேலைகள் செய்து கொடுத்துக்கொண்டு இருந்ததாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

அதில் ஒரு வேலைதான் நாடாளுமன்ற தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் ஒருவனை தில்லிக்கு அழைத்து வந்து தங்க வைத்தது. அப்போது அந்த விஷயம் பெரிதாக பேசப்படவில்லை. தவிந்தரும் விசாரணை எதுவுமின்றி பணியைத் தொடர முடிந்தது. எப்படி அவர் அப்போது தப்பினார் என்பது ஆச்சரியமான ஒரு மர்மம்.

இப்போது அவர் கைதாகி இருப்பதும், ஹிஜ்புல் உடனான அவர் தொடர்பும் அந்த மர்மக் கதவை திறக்க உதவலாம். ஆனால் திறக்குமா என்பது முக்கிய கேள்வி. அப்படி திறந்தால் அஃப்சல் குற்றமற்றவர் என்று முடிவாக வேண்டியிருக்கும். அதனை அரசு ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கும்.

அத்துணை நேர்மையானதா மத்திய அரசு ?

தூக்கில் தொங்கி விட்ட ஒருவர் அப்பாவி என்று வெளிப்படையாக ஒப்புக்கொள்ளும் அளவுக்கு நமது தேசத்தின் மனசாட்சிக்கு நேர்மை இருக்கிறதா என்று தெரியவில்லை. அதுவும் எப்படிப்பட்ட அரசு? ‘அஃப்சலை இப்போதே தூக்கில் போடு, ஏன் தாமதம்!’ என்றெல்லாம் அத்வானி தலைமையில் போராட்டங்கள் நடத்தி அப்போதைய மத்திய அரசை நெருக்கிக் கொண்டு இருந்த ஒரு கட்சி தலைமையில் நடக்கும் அரசு. மனத்துணிவு, நேர்மைத்திறன் போன்ற வார்த்தைகளை இவர்களைக் குறித்து பயன்படுத்த முடியுமா என்பதை தவிந்தரின் விசாரணை முடிவுகள் தெரியப்படுத்தும்.

ஆக்கம்: ஸ்ரீதர் சுப்பிரமணியம்