Hijab Row Karnataka

ஹிஜாப் விவகாரம் :’இரண்டு நாட்கள் காத்திருங்க..’ – தலைமை நீதிபதி!

ஹிஜாப் வழக்கு மேல்முறையீடுகளை இரண்டு நாட்களில் விசாரணைக்கு எடுத்து கொள்ள இந்திய தலைமை நீதிபதி திங்கள்கிழமை ஒப்புக்கொண்டார்.

“நான் விசாரணைக்கு பட்டியலிடுகிறேன். இரண்டு நாட்கள் காத்திருங்கள்” என ஹிஜாப் வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை அவசரமாக பட்டியலிட வேண்டும் என்று கோரிய மூத்த வழக்கறிஞர் மீனாட்சி அரோராவிடம் தலைமை நீதிபதி ரமணா கூறினார்.

05.02.2022 தேதியிட்ட அரசாணையை நிலைநிறுத்தி, கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கிய மார்ச் 15 தேதியிட்ட தீர்ப்புக்கு எதிராக SLP தாக்கல் செய்யப்பட்டுள்ளது, இந்த தீர்ப்பு மனுதாரர்கள் மற்றும் பிற பெண் முஸ்லீம் மாணவிகள் தங்கள் ப்ரீ-யுனிவர்சிட்டி கல்லூரிகளில் முக்காடு அணிவதை தடை செய்துள்ளது.

உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி, நீதிபதி கிருஷ்ணா தீட்சித் மற்றும் நீதிபதி ஜே.எம். காசி ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்றத்தின் முழு பெஞ்ச், பெண்கள் ஹிஜாப் அணிவது இஸ்லாத்தின் இன்றியமையாத மதப் பழக்கம் அல்ல என்று கூறியது. மேலும், கல்வி நிறுவனங்களில் ஒரே மாதிரியான ஆடைக் கட்டுப்பாடு விதிப்பது மனுதாரர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக இல்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

மனுதாரர்கள் 30.03.2022 அன்று பதிவு செய்து ஒரு மாதமாகியும், இந்த வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை என்று கூறி மனுவை அவசரமாக பட்டியலிடுமாறு கோரினர். அவசரப் பட்டியலுக்கு மாற்றப்பட கோரிய விண்ணப்பத்தில், இரண்டு காரணங்களை வழக்கறிஞர் ஷதன் ஃபராசத், குறிப்பிட்டுள்ளார்:

முதலாவதாக, வருடாந்திர PUC தேர்வுகள் தொடர்கின்றன, மேலும் மனுதாரர்கள் மற்றும் பிற பெண்களும் ஹிஜாபை கழற்றாத வரை அந்தத் தேர்வுகளில் பங்கேற்க வாய்ப்பு மறுக்கப்படுகிறது.

இரண்டாவதாக, ஹிஜாப் தடை செய்யப்பட்ட தீர்ப்பின்படி, மனுதாரரைப் போலவே ஏராளமான முஸ்லிம் பெண்கள், கர்நாடகா மாநிலம் முழுவதும் உள்ள அந்தந்த கல்வி நிறுவனங்களை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர், இது அவர்களின் கல்வி உரிமையை கடுமையாக பாதிக்கிறது.

கடந்த மாதம், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஹிஜாப் தடையை உறுதி செய்த கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்களை அவசரமாக பட்டியலிட வேண்டும் என்ற கோரிக்கையை தலைமை நீதிபதி நிராகரித்திருந்தார். முஸ்லீம் மாணவர்கள் தேர்வில் கலந்து கொள்ள முடியாது என்று மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கூறியபோது, ​​”தேர்வுகளுக்கும் இந்த பிரச்சினைக்கும் எந்த தொடர்பும் இல்லை” என்று தலைமை நீதிபதி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.