Dalits Rajasthan

ராஜஸ்தான்: தலித் சமூகத்தவர் திருமண ஊர்வலத்தின் போது சாதி ரீதியாக அவதூறு கூறி ரகளை !

கோட்டா (ராஜ்): ராஜஸ்தானின் கோட்டாவில், தலித் ஒருவரின் திருமணத்திற்கு முந்தைய ஊர்வலத்தின் போது தலித் வீட்டாரை, ஜாதி ரீதியாக இழிவுபடுத்தும் வகையில் பேசியதற்காகவும், குழப்பத்தை ஏற்படுத்தியதற்காகவும் 21 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (சிஆர்பிசி) பிரிவு 151 இன் கீழ் ஏழு பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர், அவர்களில் சிலர் ஏற்கனவே இந்த வழக்கில் பதிவு செய்யப்பட்டவர்கள் என்று டிஎஸ்பி மற்றும் வட்ட அதிகாரி (சிஓ) பிரவீன் நாயக் கூறினார்.

வெள்ளிக்கிழமை இரவு சஞ்சீவ் மேக்வாலின் ‘பிந்தோரி’ (திருமணத்திற்கு முந்தைய ஊர்வலம்) கோயந்தா கிராமத்தில் உள்ள பாதை வழியாக ஒரு குதிரையின் மீது ஊர்வலமாக சென்ற போது இந்த சம்பவம் நடந்துள்ளது.

கோவிலில் மாப்பிள்ளை பூஜை முடிந்து விழா முடியும் தருவாயில், ‘உயர் சாதி’யை சேர்ந்த சிலர், திருமண விருந்தினர்கள் மீது சாதிய அவதூறு கருத்துக்களை கொண்டு ஏசி, சலசலப்பை ஏற்படுத்தியதாக டிஎஸ்பி தெரிவித்தார்.

கிராமத்தில் அமைதியாக சென்ற ஊர்வலத்தில் விழாவை சீர்குலைக்கும் முயற்சிகள் நடக்கலாம் என்று எதிர்பார்த்து, ஏற்கனவே நான்கு போலீசார் குவிக்கப்பட்டனர். பூஜை முடிந்து வீடு திரும்பும் வழியில் “மேல் சாதி ஆதிக்கம் நிறைந்த பகுதி” வழியாகச் சென்றபோது, ​​​​சிலர் தலித் மக்களுக்கு எதிராக அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தி சலசலப்பை உருவாக்கினர். கூடுதல் போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர், இருப்பினும் பிரச்னை செய்தவர் தப்பி ஓடிவிட்டார், என்று மேலும் டிஎஸ்பி நாயக் கூறினார்.

கிராமத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது, நிலைமை தற்போது சீராக உள்ளது என்று டிஎஸ்பி மேலும் கூறினார்.

சனிக்கிழமை மணமகனின் தந்தை அளித்த புகாரின் பேரில், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 504 (அமைதியை சீர்குலைக்கும் உள்நோக்கத்துடன் செயல்படல்) மற்றும் SC/ST சட்டத்தின் விதிகளின் கீழ் 21 பேர் மீதும் இன்னும் அடையாளம் தெரியாத சிலர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளதாக ராம்கஞ்சமண்டி. ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி (SHO) மனோஜ் பெர்வால் கூறினார்.

“ஊர்வலத்தில் வந்த விருந்தினர்களிடம் எந்த விதமான வன்முறையும் நடக்கவில்லை அல்லது மாப்பிள்ளையை குதிரையிலிருந்து இறங்க வேண்டிய கட்டாயமும் ஏற்படவில்லை. மேல்சாதியைச் சேர்ந்த சிலர், குடிபோதையில் இருந்ததால், சாதிவெறி கொண்ட அவதூறு வார்த்தைகளை பேசினர், பதற்றத்தை உருவாக்க முயன்றனர்.. வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது” என்று வழக்கின் புலனாய்வு அதிகாரியும் (IO) டிஎஸ்பி நாயக் கூறினார்.

syndicated feed story