BJP Madhya Pradesh

பாஜக வின் அடுத்த பர்ச்சேஸ் மத்திய பிரதேச எம்.எல்.ஏ.கள் … ? கவிழுமா காங்கிரஸ் அரசாங்கம்?

மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் அரசாங்கம் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் அம்மாநில முதல்வரும் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான கமல்நாத் “தனது அரசாங்கத்தைச் சீர்குலைப்பதற்குத் தனது கட்சியின் எம்.எல்.ஏ.க்களுக்கு லஞ்சம் கொடுக்க பாஜக முயல்வதாக” குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் குர்கானில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மத்தியப் பிரதேச சட்டப் பேரவை உறுப்பினர்களில் 4 காங்கிரஸ் உறுப்பினர்களும், 4 சுயேச்சை உறுப்பினர்களும் குருக்ராமில் உள்ள ஒரு ஹோட்டலில் மத்திய பிரதேச பாஜக அமைச்சரால் வலுக்கட்டாயமாக வைக்கப்பட்டுள்ளதாக அம்மாநில காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. குருக்ராம் என்பது ஹரியானா மாநிலத்திலுள்ள ஒரு நகரமாகும்.

“எங்கள் எம்.எல்.ஏ.க்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான பிசாஹுலால் சிங்கிடமிருந்து எங்களுக்கு தொலைப்பேசி அழைப்பு வந்திருந்தது. அவர்கள் குருக்ராமில் உள்ள ஐ.டி.சி மராத்தா ஹோட்டலில் பலவந்தமாக வைக்கப்பட்டுள்ளதாகவும், தங்களை வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை என்றும் எங்களுக்குத் தெரிவித்தனர். பின்னர் எட்டு எம்.எல்.ஏ.க்களைச் சந்திக்க குருக்ராமில் உள்ள சம்பந்தப்பட்ட ஹோட்டலுக்குச் சென்ற எங்களுடைய இரு அமைச்சர்களான ஜெயவர்தன் சிங் மற்றும் ஜீது பட்வாரி ஆகியோர் ஹோட்டலில் நுழைவதற்கு அனுமதிக்கப்படவில்லை.” என என்.டி.டிவியிடம் ​​மத்தியப் பிரதேச நிதியமைச்சர் தருண் பானோட் தெரிவித்திருந்தார்.

மேலும், “ஹரியானாவில் பாஜக அரசு இருப்பதால், அங்குள்ள காவல்துறை மற்றும் மத்திய பிரதேச பாஜக எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான நரோட்டம் மிஸ்ரா, அங்கு வலுக்கட்டாயமாக வைக்கப்பட்டுள்ள எங்களுடைய இரு அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை சந்திக்க எங்களை அனுமதிக்கவில்லை,” என்று திரு பானோட் கூறினார்.

மத்தியப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் மற்றும் பாஜக எம்எல்ஏ நரோட்டம் மிஸ்ரா ஆகியோர் “காங்கிரசின் சட்டமன்ற உறுப்பினர்களை ரூ .25-35 கோடி பேரம் பேசி ஈர்க்க முயல்கின்றனர்” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜயா சிங் கூறியிருந்தார்.

கடந்த ஆண்டு, ஜூலை மாதம் 24 அன்று, மத்தியப் பிரதேச எதிர்க்கட்சி தலைவரான கோபால் பார்கவா, “மேலிருந்து ஒரு உத்தரவு வந்தால் போதும், உங்கள் அரசாங்கம் 24 மணி நேரம் கூட உயிர்வாழாது” என்று மாநிலச் சட்டசபையில் கமல்நாத் அரசாங்கத்தை தாக்கி பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வுக்குப் பின்னர் மாநிலச் சட்டசபையில் நடைபெற்ற 2019 ஆம் ஆண்டு குற்றவியல் சட்டம் (மத்தியப் பிரதேச திருத்தம்) மசோதா மீதான விவாதத்தின் போது, ​​கமல்நாத் அரசு 122 வாக்குகளைப் பெற்றிருந்தது.

231 உறுப்பினர்களைக் கொண்ட மாநில சட்டசபையில் 122 என்கிற எண்ணிக்கையானது பெரும்பான்மையை விட ஏழு அதிகமாகும்.

தற்போது அம்மாநில சட்டப் பேரவையில் காங்கிரஸின் வலிமை 114, பாஜக 107 ஆகும். மீதமுள்ள ஒன்பது இடங்களில் இரண்டு பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர்களும், இதர கட்சிகள் மற்றும் சுயேச்சை உறுப்பினர்கள் எண்ணிக்கை ஐந்தாகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: என்.டி.டிவி