Assam Bulldozer Politics Minority Muslims

அசாம்: மீன் வியாபாரி ஷஃபிகுல் இஸ்லாம் போலீசார் கஸ்டடியில் மரணம் !

அசாமில் மீன் வியாபாரி ஷஃபிகுல் இஸ்லாம் போலீஸ் காவலில் இறந்து 2 நாட்களுக்குப் பிறகு, போலீசார் அவரது மனைவி ரஷிதா காதுன் மற்றும் அவரது மகள் 8 ஆம் வகுப்பு மாணவியை போலீசார் கைது செய்துள்ளனர். அசாமில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது.

போலீசார் காவலில் வைக்கப்படிருந்த ஷஃபிகுல் மரணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து படத்ராபா காவல் நிலையத்தை எரித்ததாகக் கூறப்படும் சைஃப்பின் மனைவி மற்றும் மகள் உட்பட குறைந்தது 6 பேர்களில் 5 பேரின் மீது யுஎபிஎ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளனர்.

“வீடியோ காட்சிகளில், ( ஷஃபிகுல்) மனைவி மற்றும் மகள் இருவரும் காவல் நிலையத்திற்கு தீ வைப்பதைக் காணலாம். கைது செய்யப்பட்ட மற்றவர்களும் (இறந்தவரின்) உறவினர்கள்” என்று நாகோன் எஸ்பி லீனா கூறியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக லீனா செய்தித்தாளிடம் கூறினார்: 1. காவலில் இருந்த ஷஃபிகுல் மரணம் தொடர்பாக இயற்கைக்கு மாறான மரண வழக்கு; 2. காவல் நிலையத்திற்கு தீ வைத்தது தொடர்பான வழக்கு; மற்றும் 3. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு “பயங்கரவாத தொடர்புகள்” இருப்பதாக போலீசார் சந்தேகிப்பதால் UAPA வழக்கு.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் பங்களாதேஷில் தடைசெய்யப்பட்ட அமைப்பான அன்சருல்லா பங்களா டீமுடன் தொடர்புள்ளவர்களா என சோதனை செய்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

சிறார் சட்ட விதிகளின்படி சிறுமி கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

அஸ்ஸாமில் உள்ள நாகோன் நிர்வாகம், மீன் வியாபாரி சஃபிகுல் இஸ்லாமின் போலீசார் காவலில் இருந்த போது இறந்த வழக்கில், மாவட்டத்தில் உள்ள படத்ராபா காவல் நிலையத்திற்கு தீ வைத்ததாகக் கூறப்படும் முஸ்லிம்களின் வீடுகள் இடிக்கப்பட்டன. அதற்கு ஒரு நாள் கழித்து இந்த கைது நடவடிக்கையையும் போலீசார் மேற்கொண்டுள்ளனர். இதையெல்லாம் தட்டி கேட்பதற்கு அங்கு ஒருவருமே உள்ளதாக தெரியவில்லை.

இறந்தவரான ஷஃபிகுல் இஸ்லாமின் வீட்டையும் மாவட்ட நிர்வாகம் இடித்துள்ளது.

வெள்ளிக்கிழமை மாலை சிவ்சாகருக்குப் பேருந்தில் ஏறச் சென்ற ஷஃபிகுல் இஸ்லாம் அசாம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

அவரை விடுவிக்க போலீசார் ரூ.10,000 மற்றும் ஒரு வாத்து லஞ்சம் கேட்டதாக ஷஃபிகின் குடும்பத்தினர் ‘தி இந்து’ ஊடகத்திடம் தெரிவித்தனர். “எங்களால் ஒரு வாத்து மட்டுமே வாங்க முடிந்தது, அதனால் அவர்கள் [போலீஸ்] அவரை அடித்துக் கொன்றனர்” என்று ஷஃபிகுல் இஸ்லாமின் மனைவி கூறினார்.

ஷஃபிகுல் இஸ்லாமின் மனைவிக்கு அவரது கணவர் நாகோன் சிவில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்பட்டது, அங்கு அவர் இறந்துவிட்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

ஷஃபிகுல் இஸ்லாம் இறந்த சிறிது நேரத்திலேயே, நாகோன் மாவட்டத்தில் உள்ள படத்ராபா காவல் நிலையத்தை ஒரு கூட்டம் தீ வைத்து எரித்தது.

ஷஃபிகுல் இஸ்லாமின் மரணம் குறித்து கர்பி ஆங்லாங் காவல் துணைக் கண்காணிப்பாளரால் விசாரணை நடத்தப்படும் என்று Scroll.in செய்தி வெளியிட்டுள்ளது.