Activists Arrests Hindutva Uttar Pradesh Yogi Adityanath

வரம்பு மீறிய உபி முதல்வர், பாடமெடுத்த அலஹாபாத் உயர்நீதிமன்றம் !

யோகி ஆதித்யநாத் என அழைத்து கொள்ளும் உபி முதல்வர் அஜய் பிஷ்த் சிங் பதவி ஏற்றது முதல் சிறும்பான்மையினர் மீது தாக்குதல், பாலியல் வன்முறைகள் என பல்வேறு விதங்களிலும் மாநில சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு புதைகுழியில் உள்ளது குறித்து அனுதினமும் செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் சமீபத்தில் மோடி அரசின் கருப்பு சட்டங்களுக்கு எதிராக ஜனநாயக முறையில் போராடிய அப்பாவி முஸ்லிம்கள் பலரை (20க்கும் மேற்பட்டோரை) சுட்டு கொன்றது அஜய் பிஷ்த்தின் காவல்துறை.

மேலும் அந்த சமயத்தில் உபி காவல்துறை படுமோசமாக வீடு புகுந்து அராஜகம் செய்தது, கேமராக்களை உடைத்து, முஸ்லிம்கள் கடைகளை உடைத்து எரிந்தது. இவை அனைத்தும் மொபைலில் பதிவு செய்யப்பட்டதால் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது.

ஆர்.எஸ்.எஸ். காரர்களுடன் கூட்டு சேர்ந்து கொண்டு உபி போலீசார் நரவேட்டையில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர், எனினும் இது குறித்து எல்லாம் ஒரு வழக்கும் பதிவு செய்யாத அஜயின் அரசு, பல அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் மீதும் பெண்கள் மீதும் பொய் வழக்கை பதிவு செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்கள் பொது சொத்துக்களை சேதப்படுத்தி விட்டதாக அலறியது அஜய் பிஷ்த் தின் அரசு. அவர்கள் பொது சொத்துக்களை சேதப்படுத்தியதாக கூறி பல லச்சம் ரூபாய்கள் அபராதமும் விதிக்கப்பட்டது. இது சட்டவிரோதமானது, தான்தோன்றித்தனமானது என சுட்டிக்காட்டியும் அறிவிப்பு திரும்ப பெறவில்லை.கைது செய்யப்பட்டவர்கள் பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளானார்கள். இதில் பெண்களுக்கு விதி விலக்கு இல்லை.

பெண்களுக்கும் சித்திரவதை:

சதாப் ஜாபர் என்பவர் கொடூர சித்திரவதைக்கு ஆளானதை பகிரங்கமாக கூறினார். எனினும் இது குறித்தெல்லாம் பாஜக அரசு ஒரு வழக்கும் பதிவு செய்யவில்லை. எனினும் கைது செய்யப்பட்ட பலரது பெயர்களையும் , புகைப்படங்களையும் அவர்களது வீட்டு விலாசங்களுடன் அச்சடித்த பேனர்கள் நகரத்தில் வைத்தது பாஜக அரசு.

இவர்களில் எவரும் குற்றம் நிரூபிக்கப்பட்டவர்கள் இல்லை. இதுகுறித்து கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதை யடுத்து, அலஹாபாத் நீதிமன்றம் தானாக முன்வந்து இந்த வழக்கை விசாரித்தது. இவ்வாறு செய்வதற்கு தடை விதித்த நீதிமன்றம், உடனடியாக அந்த பேனர்களை நீக்குமாறு உத்தரவிட்டது.

தலைமை நீதிபதி கோவிந்த் மாத்தூர் தலைமையிலான பெஞ்ச், மாவட்ட மாஜிஸ்திரேட் மற்றும் போலீஸ் கமிஷனருக்கு உயர்நீதிமன்றத்தின் பதிவாளர் ஜெனரளிடம் வரும் மார்ச் 16 ஆம் தேதிக்குள் இது தொடர்பான இணக்க அறிக்கையை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டதாக லைவ் லா தெரிவித்துள்ளது. விடுமுறை நாளான ஞாயிறு அன்று நீதிமன்றம் விசாரித்ததால் இந்த நடவடிக்கை அசாதாரணமானது கருதப்படுகிறது.

https://twitter.com/Newscap_in/status/1205838202168172545

உத்தரபிரதேச அதிகாரிகளின் நடவடிக்கை “மிகவும் அநியாயமானது” என்று ஞாயிற்றுக்கிழமை குறிப்பிட்ட நீதிமன்றம், இது தனிநபர்களின் தனிப்பட்ட சுதந்திரத்தின் மீதான முழுமையான அத்துமீறல் என்றும் கூறியது.

அரசு வழக்கறிஞரின் அபத்தம்:

ஆனால் அட்வகேட் ஜெனரல் நீதிமன்றத்தின் அதிகார வரம்பை மறுத்து, லக்னோவில் தான் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி, இது முதன்மை பெஞ்சின் அதிகார எல்லைக்கு அப்பாற்பட்டது என கூறினார்.

அதற்கு பதிலளித்த நீதிமன்ற பெஞ்ச், முறையான விசாரணை நடத்தப்பட்டிருக்க வேண்டும் என்றும், மக்களை இவ்வாறு அடையாளப்படுத்துவதற்கு, எந்தவொரு சட்டமும் இல்லாத நிலையில் பதாகைகளை வைப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கூறி வழக்கறிஞருக்கு பாடம் எடுத்தது.

நீதிமன்றத்தில் சம்பவம்..:

இந்த வழக்கில் அட்வகேட் ஜெனரல் மாநில அரசை பிரதிநிதித்துவப்படுத்துவார் என்று கூடுதல் அட்வகேட் ஜெனரல் நீரஜ் திரிபாதி நீதிமன்றத்திற்கு தெரிவித்ததால், ஞாயிற்றுக்கிழமை, நீதிமன்றம் இந்த வழக்கை காலையில் விசாரித்து பின்னர் பிற்பகல் 3 மணி வரை ஒத்திவைத்தது.

விசாரணை மீண்டும் தொடங்கியபோது, அட்வகேட் ஜெனரல் ராக்வேந்திர பிரதாப் சிங், பொது மற்றும் தனியார் சொத்துக்களை சேதப்படுத்தியுள்ளதால், பொது நல வழக்கு போன்ற விஷயத்தில் நீதிமன்றம் தலையிடக்கூடாது என்று வாதிட்டார்.

மேலும் எதிர்காலத்தில் இதுபோன்ற வன்முறை சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க, மேற்கொள்ளப்பட்ட தடுப்பு நடவைக்கையே பேனர்கள் வைத்தது என அட்வகேட் ஜெனரல் குறிப்பிட்டார்.

பதாகைகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் முகவரிகள் மற்றும் புகைப்படங்கள் இருந்தன, மேலும் அவை லக்னோவில் உள்ள முக்கிய சந்திப்புகளில் வைக்கப்பட்டன. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் அறிவுறுத்தலின் பேரில் வியாழக்கிழமை லக்னோவில் உள்ள முக்கிய சாலைகளிலும் இந்த பேனர்கள் வைக்கப்பட்டது குறித்து பி.டி.ஐ செய்தி வெளியிட்டது.

குற்றம் சாட்டப்பட்டவர் பணம் செலுத்தத் தவறினால், அவர்களின் சொத்துக்கள் அரசுடைமையாக்கப்படும் என்றும் அந்த பேனரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாங்கள் முன்னின்று போராடுவோம்:

பதாகைகளில் பெயரிடப்பட்டவர்களில் ஆர்வலர்-அரசியல்வாதி சதாஃப் ஜாபர், வழக்கறிஞர் முகமது ஷோயிப், நாடக ஆளுமை தீபக் கபீர் மற்றும் முன்னாள் இந்திய போலீஸ் சேவை (ஐ.பி.எஸ்) அதிகாரி எஸ்.ஆர்.தராபுரி ஆகியோர் அடங்குவர். பெயரிடப்பட்ட அனைவரும் தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளனர், மேலும் அரசாங்கத்தின் இவ்வாறான நடவடிக்கையை நீதிமன்றத்தில் எதிர்கொள்ளப்போவதாக அறிவித்துள்ளனர்.

“நீதிமன்றத்தில் இதுவரை நிரூபிக்கப்படாத ஒரு விஷயத்திற்காக நாங்கள் எவ்வாறு பகிரங்கமாக அவமானப்படுத்தப்படலாம்?” என சதாஃப் ஜாபர் தெரிவிக்கிறார்.

“இது ஒன்றும் ஆப்கானிஸ்தான் அல்ல. சட்ட விவகாரங்களை இது போன்ற பொதுவில் வைக்க முடியாது. எங்கள் ஜாமீன் உத்தரவு எங்களுக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறுகிறது, ” எனவும் ஜாபர் கூறினார்.

“நாங்கள் தலைமறைவாக இல்லை,” என்று கூறிய சதாப், அவர்கள் அழைக்கும் போதெல்லாம் நீதிமன்றம் மற்றும் பொலிஸ் முன் ஆஜராபவர்கள் நாங்கள் என கூறினார்.

“நாங்கள் ஏன் இப்படி குறிவைக்கப்படுகிறோம்? விஜய் மல்லையா மற்றும் நீரவ் மோடியின் சுவரொட்டிகளை அவர்கள் அனைத்து விமான நிலையங்களிலும் வைத்தார்களா? அவர்கள் அதைச் செய்திருந்தால், அவர்கள் நாட்டின் பணத்துடன் தப்பி ஓடியிருக்க மாட்டார்கள். ” – சதாஃப் ஜாபர்

முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி எஸ்.ஆர்.தராபுரியும் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என்று கூறினார்.

“இந்த பேனர்களை வைத்ததின் மூலம் எங்கள் வாழ்க்கை, சொத்து மற்றும் சுதந்திரம் ஆபத்தில் உள்ளன, எங்கள் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கப்பட்டுள்ளது.,” என எஸ்.ஆர்.தராபுரி, முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி கூறினார்.

இது குறித்து சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளனர்.

“உ.பி.யின் பாஜக அரசாங்கத்தின் அணுகுமுறை என்னவென்றால், முதல்வரும் அவரது அடிச்சுவடுகளைப் பின்பற்றும் அதிகாரிகளும் பாபாசாகேப் அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்பிற்கு மேலானவர்கள் தாங்கள் என சிந்திக்கத் தொடங்கியுள்ளனர். நீங்கள் அரசியலமைப்பிற்கு மேல் இல்லை என்று உயர் நீதிமன்றம் அரசாங்கத்திற்கு பாடம் எடுத்துள்ளது. ” என பிரியங்கா காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.