Activists Dalits Gujarat

குஜராத்: தலித் ஆர்டிஐ செயற்பாட்டாளரின் கொலை குறித்து சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பிய ஜிக்னேஷ் இடைநீக்கம் செய்யப்பட்டார்!

குஜராத்: சட்டமன்றத்தில் சபாநாயகர் அனுமதியின்றி தலித் தகவல் அறியும் ஆர்வலர் ஒருவர் கொல்லப்பட்ட விவகாரத்தை பலமுறை எழுப்பியதை அடுத்து, “ஒழுக்கமின்மை” காரணமாக குஜராத்தைச் சேர்ந்த சுயேச்சை எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி, மாநில சட்டமன்றத்தில் இருந்து ஒரு நாள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக சபாநாயகர் ராஜேந்திர திரிவேதியின் உத்தரவின் பேரில் அவர் சட்டமன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். இதே போல கடந்த வியாழக்கிழமையும் இதே காரணத்திற்காக ஜிக்னேஷ் சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

மார்ச் 2 ம் தேதி போலீஸ்ஸார் முன்னிலையில் ஒரு கும்பலால் கொல்லப்பட்ட தலித் சமூகத்தை சேர்ந்த ஆர்வலரின் படத்தை ஏந்தி நின்றார். கேள்வி நேரம் முடிவடைந்தவுடன், வட்கம் சட்டமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜிக்னேஷ், பதாகையில் “நீங்கள் ஏன் குற்றவாளிகளை கைது செய்யவில்லை?” என்பதை கையில் ஏந்தியவாறு இது குறித்து விவாதிக்க நேரம் ஒதுக்கும்படி கேட்டார்.

பாவ்நகரின் கோகா தாலுகாவில் சனோதரில் வசித்து வந்த அம்ரபாய் போரிச்சா (50) என்பவர் உள்ளூர் போலீஸ் துணை ஆய்வாளர் முன்னிலையில் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

மேவானியின் மைக் அணைக்கப்பட்ட நிலையில், பாஜக அரசு ஏன் போலீஸ் சப் இன்ஸ்பெக்டரை இதுவரை கைது செய்யவில்லை என்று கேள்வி எழுப்பினார். உள்துறை இணை அமைச்சர் பிரதீப்சிங் ஜடேஜா பி.எஸ்.ஐ.யுடன் தொடர்புடையவரா என்பதை தெளிவுபடுத்துமாறு அவர் அரசாங்கத்திடம் கேட்டார்.

ஜிக்னேஷிடம் “ஒழுக்கமற்ற” செயலியில் ஈடுபட வேண்டாம் என்று சபாநாயகர் கண்டித்தார். ஏதேனும் பிரச்சினை எழுப்ப விரும்பினால் முதலில் அவரிடம் அனுமதி பெற வேண்டும் என்றும் திரிவேதி ஜிக்னேஷிடம் கூறினார்.

பலமுறை கேட்டுக்கொண்ட போதும் மேவானி உட்காராத நிலையில், எம்.எல்.ஏ.வை சபைக்கு வெளியே அழைத்துச் செல்லுமாறு சார்ஜென்ட்களிடம் திரிவேதி தெரிவிக்க மேவானி சட்டமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.